போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நெருக்கும் NCB.. ஆஜராக டைம் கேட்கும் அமீர்..
போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் வழக்கில், ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு விசாரணைக்கு அழைக்குமாறு இயக்குநர் அமீர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக்கை கடந்த மார்ச் 9ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரது முக்கியக் கூட்டாளி சதானந்தன் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் திரைப்பட இயக்குநர் அமீருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு முக்கியக் காரணம் ஜாபர் சாதிக்கும் அமீரும் நெருக்கமான நண்பர்கள். அதோடு மட்டுமல்லாது ஜாபர் சாதிக்கின் தயாரிப்பில் "இறைவன் மிகப் பெரியவன்" என்ற படத்தையும் அமீர் இயக்கியது தான்.
இந்நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஏப்ரல் 2-ம் தேதி ஆஜராகுமாறு இயக்குநர் அமீர் மற்றும் அப்துல் பாசித் புஹாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது. ஆனால் அமீர், அப்துல் பாசித் புகாரி ஆகியோர் ரம்ஜான் பண்டிக்கைக்கு பிறகு விசாரணைக்கு அழைக்குமாறு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களது கோரிக்கையை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
What's Your Reaction?