பணமில்லாம யாரும் மதிக்கல சார்.. ஒரு வாரத்துல கார் ஓட்ட கத்துக்கிட்டேன்: ஸ்வேதாவின் நம்பிக்கையூட்டும் கதை
குடும்ப கஷ்டத்தை போக்குவதற்காக கார் ஓட்ட தொடங்கிய ஸ்வேதா இன்று பல பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். ஸ்வேதாவுடன் குமுதம் குழுமத்தின் ஸ்நேகிதி குழுவினர் மேற்கொண்ட நேர்க்காணலின் தொகுப்பு பின்வருமாறு-

கலகல கண்ணாடி வளையல்கள் அணிந்திருக்கும் அந்தக் கைகள், ஸ்டியரிங்கை கவனமாகப் பிடித்துக்கொண்டிருந்தன. வாடிக்கையாளரின் பாதுகாப்பான பயணத்தின் மீது அந்தக் கண்கள் குவிந்திருந்தன. சுடிதாருக்கு மேலாக வெள்ளை சட்டை அணிந்திருந்த ஸ்வேதா, தன்னுடைய காரை கம்பீரமாக ஸ்டார்ட் செய்து, கிளம்புகிறார். காரில் பயணித்தவாறே அவரிடம் பேசினோம்.
”திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டைதான் எனக்கு சொந்த ஊர். என்கூட பிறந்தவங்க 4 பேரு. எங்க அப்பா, நான் சின்ன வயசுல இருந்தப்பவே தவறிட்டாரு. அம்மாதான் வீட்டு வேலைக்குப் போயி எங்களை வளர்த்தாங்க. நான்தான் மூத்த பொண்ணுங்கிறதால, தாய்மாமா புண்ணியகோட்டிக்கே கல்யாணம் பண்ணிவெச்சிட்டாங்க. நான் 10-வது வரைதான் படிச்சிருக்கேன். எங்க வீட்டுக்காரரு லாரி ஓட்டுறாரு. சென்னையில வாடகை வீட்லதான் குடியிருக்கோம். கல்யாணத்துக்கு அப்புறம் குடும்பக் கஷ்டம். எங்ககிட்ட பணம் இல்லங்கிறதால சொந்தக்காரங்க மதிக்கல. எங்களுக்கு மூணு குழந்தைங்க. மூத்தவன் நவீன், 9-வது படிக்கிறான். அடுத்ததா பொறந்த எங்க பொண்ணு நவசக்தி, 7-வது படிக்கிறா. கடைசி பையன் நவீஷ்வர், 5-வது படிக்கிறான்.
முதல்ல டெய்லரிங் வேலைதான் பார்த்தேன். அதுல பெருசா வருமானமில்ல. அப்புறம், கார்மென்ட்ஸ் வேலைக்குப் போனேன். அந்த வருமானம், குழந்தைங்களோட படிப்புக்கு சுத்தமா பத்தல. அதனால, ‘நம்மள மாதிரி நம்ம குழந்தைங்களும் படிக்காம இருந்துடக்கூடாது’ன்னு நினைச்சி, ‘நான் கார் ஓட்டலாம்னு இருக்கேன்’னு எங்க வீட்டுக்காரர்கிட்ட கேட்டேன். அவரும் சம்மதிச்சார். என்கிட்ட இருந்த கொஞ்ச நகையை வெச்சி, கொஞ்ச கடன் வாங்கி, லோன் போட்டு, கார் வாங்கினோம். கார் ஓட்டுறதுக்கு எங்க வீட்டுக்காரர்தான் எனக்குக் கத்துக்கொடுத்தாரு. சொன்னா நம்பமாட்டீங்க... ஒரு வாரத்துலயே நல்லா கார் ஓட்டுறதுக்குப் பழகிட்டேன். இப்போ 8 மாசமாதான் கார்ல சவாரி போயிட்டிருக்கேன். தொடர்ச்சியா கார் ஓட்டறதால, பிள்ளைகளைப் பாத்துக்கமுடியலங்கிற கவலை எனக்கு இருக்கு. காலையிலயே சமைச்சி வெச்சிட்டு வந்துடுவேன். சவாரி முடிச்சிட்டு வீட்டுக்குப் போறதுக்கு நைட் 9 மணி ஆகிடும். அதுவரைக்கும் என் பிள்ளைங்க அவங்களாவே அவங்க வேலைகளைச் செஞ்சிப்பாங்க.
சங்கடத்தை தரும் இயற்கை உபாதை பிரச்சினை:
சில நேரங்கள்ல நல்ல கஸ்டமர்களும் வருவாங்க; குடிச்சிட்டுத் தகராறு பண்றவங்களும் வருவாங்க’ன்னு எங்க வீட்டுக்காரர் சொன்னதால, அதுமாதிரியான கஸ்டமர்களை ஹேண்டில் பண்றது எனக்குப் பெரிய கஷ்டமா தெரியல. ஆனா, சவாரி போறப்போ இடையில ‘இயற்கை உபாதை’ பிரச்னை மட்டும்தான் எனக்கு சங்கடத்தைக் கொடுக்கும். சில பெட்ரோல் பங்க்ல டாய்லெட் யூஸ் பண்ண அனுமதிப்பாங்க. ஒருசில பெட்ரோல் பங்க்ல, டாய்லெட்டை பூட்டிவெச்சிக்கிட்டு, சாவிக்கு அலையவிடுவாங்க. அந்தமாதிரி நேரத்துல சில கஸ்டமர்களை வீட்ல இறக்கிவிடுறப்போ, என்னோட கஷ்டத்தைச் சொன்னா, அவங்க வீட்டு டாய்லெட்டை யூஸ் பண்ணிக்க அனுமதிப்பாங்க. அப்படி உதவுன சிலர், எனக்குச் சொந்தக்காரங்கபோல ஆகியிருக்காங்க!
அதேமாதிரி, கார் ஓட்டிட்டுப் போகும்போது, ‘இந்த வேலைக்கு மட்டும்தான் பொண்ணுங்க வராம இருந்தீங்க... இப்போ இதுக்கும் வந்துடீங்களா?’ன்னு சொல்லி, சிலர் என்னையத் திட்டியிருக்காங்க. ரோட்ல போகும் போது சேஸ் பண்ணி, வழிவிடாம அழவெச்சிருக்காங்க. ஆனா, பெண் கஸ்டமர்கள் சிலர், ‘பரவாயில்லையே... நீங்க சூப்பரா கார் ஓட்டுறீங்க!’ன்னு சொல்வாங்க. ‘எங்களால முடியாததை நீ பண்றம்மா’ன்னு சிலர் சிலாகிச்சு, சொல்வாங்க. இதெல்லாம் எங்க வீட்டுக்காரர் கொடுத்த சப்போர்ட்னாலதான் சாத்தியமாச்சு’ன்னு நினைச்சு, பெருமைப்பட்டுக்குவேன்.
ஆரம்பத்துல எங்க சொந்தக்காரங்ககூட, ‘பொண்ணா இருந்துக்கிட்டு கார் ஓட்டுறா பாரு’ன்னு சொல்லி, தகாத வார்த்தையால அவமானப்படுத்தியிருக்காங்க. ஆனா, இப்போ அவங்களே, நாங்க நல்ல நிலைமையில இருக்கிறதைப் பெருமையா பார்க்கிறாங்க. நான்தான் எங்க அம்மா, தங்கச்சி, தம்பிகளைப் பார்த்துக்கிறேன். எங்க மொத்த குடும்பத்தையும் நான் பார்த்துக்கிறதை நினைக்குறப்போ, ரொம்பவே சந்தோஷமா இருக்குங்க.
‘அந்த முருகனோட அருளால சம்பாதிச்சு, லோனை அடைச்சிடுவேன்’கிற தைரியத்துல கார் வாங்கினேன். அதனால, வைராக்கியத்தோட கார் ஓட்டி, லோனை அடச்சிக்கிட்டு,குடும்பத்தையும் நல்லா பார்த்துக்கிறேன். கூடிய சீக்கிரத்துல சென்னையில சொந்தமா ஒரு வீடு வாங்கணும்கிறதுதான் என்னோட ஆசை!’’ என்று நம்பிக்கையுடன் சொன்னார், ஸ்வேதா.
படங்கள்: ஸ்ரீநாத் வெங்கடேஷ் ; கட்டுரை: வெ.அன்பரசி (குமுதம் சிநேகிதி -1.5.2025)
What's Your Reaction?






