மகாராஜா கவனத்தை ஈர்த்த தோவாளை மாணிக்க மாலை: பிரதமரின் பாராட்டு.. மனம் நெகிழும் வனிதாஸ்ரீ
கிருஷ்ணன் புதூர் கிராமத்தில் ஐந்தாவது தலைமுறையாக ‘மாணிக்க மாலை’ கட்டும் தொழிலில் ஈடுபட்டுவரும் வனிதாஸ்ரீ சரவணன் சிநேகிதி இதழுக்காக வழங்கிய சிறப்பு நேர்க்காணலின் தொகுப்பு.

பூக்களுக்கு பெயர்பெற்றது, ‘தோவாளை’. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில் தயாராகும் ‘மாணிக்க மாலை’க்கு சமீபத்தில் ‘புவிசார் குறியீடு’ கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து மாணிக்க மாலை கட்டும் தொழிலில் ஈடுபட்டு வரும் வனிதா ஸ்ரீ அளித்த நேர்க்காணல் விவரம் பின்வருமாறு-
‘‘நான் பி.டெக் மற்றும் எம்.பி.ஏ படித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தேன். பூ கட்டும் கலையை சிறுவயது முதலே அப்பாவிடம் கற்றுக்கொண்டு, அவருக்கு உதவியாக இருந்து வந்தேன். நேர்த்தியான முறையில் 15 ஆண்டுகளாக ‘மாணிக்க மாலை’யைக் கட்டிவருகிறேன். 4-வது தலைமுறை வரை எங்கள் குடும்பத்தினர் மட்டுமே இந்த வகை மாலையைக் கட்டிவந்தோம்.
என்னுடைய தலைமுறையில்தான், ‘தமிழ்நாடு கைத்துறை தொழில்கள் கழகம்’ வாயிலாக பலரிடமும் இந்தக் கலையை கொண்டு செல்ல வேண்டுமென ஊக்கப்படுத்தி, ஆதரவு தெரிவித்ததால், பிறருக்குக் கற்றுகொடுத்தோம். தாரணி, முத்தும் பெருமாள் என்று எனக்கு இரு பிள்ளைகள். 6-வது தலைமுறையான அவர்கள் தற்போது படித்துக்கொண்டிருந்தாலும் கூட, ‘மாணிக்க மாலை’ கட்டுவார்கள். தாரணி, சிதம்பரத்தில் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கிறாள். கல்வி மற்றும் கலைக்காக, ‘பாரதி யுவகேந்த்ரா’, ‘யுவஸ்ரீ கலாபாரதி’ விருது பெற்றுள்ளாள். மகன் தற்சமயம் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளான்."
பிரதமரின் பாராட்டு:
”நான் நன்கு படித்திருந்தாலும்கூட, பூக்களோடு எங்களுக்கு இருக்கும் பூர்வீகப் பெருமையைக் கட்டிக்காப்பதையே விரும்புகிறேன். ‘மாணிக்க மாலை’ கட்டுவதில் எங்களுடைய குடும்பம் கைதேர்ந்தது. இந்தக் கைத்திறன் கலையில் நான் சிறந்து விளங்கியதால்தான் ‘தமிழ்நாடு பூம்புகார் கைத்திறன் தொழில் வளர்ச்சி கழகத்தினர்’ என்னை இதற்காக தேர்ந்தெடுத்தனர். ‘மாணிக்க மாலை’ அலங்கரிப்பதில் என்னுடைய இரு சகோதரிகளும் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்கள். ஒருவர் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார்.
‘தமிழ்நாடு கைத்தறி 2019 இந்தியா- சீனா செகண்ட் இன்ஃபார்மல் சமித்’, மாமல்லபுரத்தில் நடந்தது. அதில், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ‘மாணிக்க மாலை’யை டிஸ்பிளே செய்வதற்காக நான் சென்றிருந்தேன். பிரதமர் நரேந்திர மோடி, ‘நம் கலாச்சாரத்தில் பூக்கள் இல்லாமல் எந்த விசேஷமும் இல்லை. எந்த நல்ல நிகழ்விலும் பூக்களுக்கே முதலிடம்’ என்றும், ‘மாணிக்க மாலை எவ்வளவு சிறப்புவாய்ந்தது’ என்றும், அதன் மகிமைகள் பற்றியும் சீன அதிபரிடம் விளக்கினார்; சீன அதிபர் மிகவும் வியந்தார்.
இரு நாட்டுத் தலைவர்களை நான் மிக அருகிலேயே சந்தித்ததற்கும், எனக்கு இத்தனைப் பெருமைக் கிடைத்ததற்கும், நான் இந்தக் குடும்பத்தில் பிறந்தது ஒரு காரணம். இந்தப் பூக்களுக்கும் என்னுடைய கலைக்கும் கிடைத்த வெற்றி. இந்த நேரத்தில் என் மூதாதையர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.”
மாணிக்க மாலை: என்ன ஸ்பெஷல்?
மற்ற மாலைகள் பார்க்க, உருளை வடிவில் இருக்கும். பார்க்க, அவை பூக்கள் எனத் தெரியும். கட்டுவதும் சுலபம். ஆனால், ‘மாணிக்க மாலை’யானது பின்னல் முறையில் கட்டப்படுவதால், கொஞ்சம் சிரமம். பூ என்று தெரியாத வண்ணம், சம்பா நாரில் அரளிப்பூ, நொச்சி இலையை மடித்துவைத்து கட்டுவார்கள். சிவப்பு மற்றும் வெள்ளை நிற அரளிப்பூக்கள், பச்சை நிறத்துக்கு நொச்சி இலையை இந்தவகை மாலை கட்டுவதற்குப் பயன்படுத்துவார்கள். முன்னோர் செய்துவந்த இந்த முறையில்தான் பாரம்பரியம் மாறாமல் நாங்கள் இன்றும் செய்து வருகிறோம்.
ஒவ்வொரு பகளத்திலும் (வரிசை) சிவப்பு எத்தனை? பச்சை எத்தனை? வெள்ளை எத்தனை? என்ற எண்ணிக்கையில் சேர்த்து கட்டுவோம். இரண்டரை ஜான் அளவிலான மாலையைக் கட்டி முடிக்க, 5 மணி நேரமாகும். இந்த மாலைகளை நாங்கள் ஆறு தலைமுறைகளாக பத்மநாபசுவாமி கோயிலுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறோம். தாத்தா காலம்வரைக்கும் திருவிழா காலங்களில் அனுப்பிக்கொண்டிருந்தார்கள். அதன்பிறகு, தினமும் 6 ஜோடி ‘மாணிக்க மாலை’களை நாங்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
தோவாளை, கிருஷ்ணன்கோயில், மலைக்கோயில், முத்தாரம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், குமரக்கோயில், பூதபாண்டி பூதலிங்கசாமி கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் என்று பல கோயில்களுக்கும் அனுப்புகிறோம். சிதம்பரத்தில் நடராஜர் கோயில் பல்லக்கு அலங்காரத்திற்கும், திருப்பதி பல்லக்கு அலங்காரத்திற்கும் ‘மாணிக்க மாலை’களைத்தான் பயன்படுத்துவார்கள்.
மகாராஜாவின் கவனத்தை ஈர்த்த மாலை:
சித்திரைத் திருநாளில், பத்மநாபசுவாமி கோயிலில் இந்த மாலையைப் பார்த்த மகாராஜா, ‘இது என்ன மாணிக்கக்கல் பதித்த மாதிரி இருக்கிறதே! இது என்ன மாணிக்க மாலையா?’ என்று ஆச்சரியப்பட்டு கேட்டதால், இந்தவகை மாலைக்கு ‘மாணிக்க மாலை’ என்ற பெயர் நிலைத்துவிட்டது.
கல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று, பயிற்சி அளித்திருக்கிறோம். ‘புஸ்ப பீட்டன் சொசைட்டி’ என்ற அமைப்பின் மூலமாக ‘வாஃபா’ (WAFA) என்ற அமைப்பு உலகளவில் கண்காட்சியும் ஒர்க்ஷாப்பும் நடத்தினார்கள். அதில், எல்லா நாடுகளில் இருந்தும் பலரும் வந்திருந்தார்கள். அவர்களுக்குப் பயிற்சியளித்தோம். இன்னும் நிறைய பேருக்கு ‘மாணிக்க மாலை’ கட்ட பயிற்சி தரவேண்டும் என்று விரும்புகிறேன். 'அடுத்த தலைமுறைக்கான கைத்திறன் போட்டி’யில் நான் முதல் பரிசு பெற்றேன். அதன்பிறகு, பூம்புகார் மாவட்ட விருதும், பூம்புகார் மாநில விருதும் பெற்றுள்ளேன்’’ என்று நெகிழ்வாகச் சொன்னார், வனிதாஸ்ரீ.
Read more: அரிசியில் அதிகரிக்கும் ஆர்சனிக்.. விஷமாகும் உணவு: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு
What's Your Reaction?






