இளையராஜா ஒரு இசை மருத்துவர்.. வெற்றிமாறன் ஒரு யுனிவர்சிட்டி.. சூரி நெகிழ்ச்சி!
வெற்றிமாறன் என்னும் யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி படித்ததற்கு பிறகு தான் என் வாழ்க்கை மாறியது என விடுதலை 2 இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசினார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து வெளியாக இருக்கிற படம் விடுதலை 2. விடுதலை முதல் பாகத்தின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (நவ. 26) நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் சூரி, “நீங்க கத்த கத்த என்னை விஜய் சேதுபதி கலாய்ச்சிட்டு இருக்காரு. என்ன மாமா எல்லாம் உங்க ஆளுங்களா இறக்கிடீங்களா என்று விஜய் சேதுபதி கிண்டல் செய்கிறார். எந்த விழாவாக இருந்தாலும் கடந்த 49 ஆண்டுகளாக இளையராஜாதான் ஒரே நாயகன். இளையராஜா ஒரு இசை மருத்துவர். வெற்றிமாறன் என்னும் யுனிவர்சிட்டியில் விடுதலை என்ற டிகிரி படித்ததற்கு பிறகுதான் என் வாழ்க்கை மாறியது. என் வாழ்க்கையை கிமு, கிபி என்பது போல் விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின் என்று பிரிக்கலாம். கொட்டுக்காளி படம் பார்த்து விட்டு நடிகர் கமல்ஹாசன் என்னை பாராட்டி எனக்கு நான்கு பக்க கடிதத்தை எழுதினார். இதற்கெல்லாம் காரணம் வெற்றி மாறன் தான்” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “ராஜா இருக்கும் காலத்தில் அவர் இசையை ரசிப்பதே பெரும் வரமாக நினைக்கின்றேன். அவரோடு கேள்வி கேட்பது, அவரோடு பழகுவது, அவரோடு பேசுவது, அவர் படத்தில் வேலை பார்த்தது, இப்படி பல வரங்களை வாங்கி வந்த பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன். முதன் முதலில் தன் காதலியின் முகத்தை எதிரில் அமர்ந்து பார்ப்பது போல் இளையராஜா பேசும் பொழுது அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் இசை மட்டுமல்லாமல் அவர் பேச்சிலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.
விடுதலை 2 பற்றி பேச வேண்டும் என்றால் வெற்றிமாறன் மட்டுமே உரிமை கொண்டாடக் கூடிய படம். வெற்றிமாறன் விடுதலை படத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருந்தோம் என்பதுதான் எதார்த்தம். வெற்றிமாறன் என்ற பல்கலைக்கழகத்தில் விடுதலை என்ற பட்டப் படிப்பை நான்கு ஆண்டுகள் படித்து பெற்றுள்ளேன். ஒவ்வொரு படத்திலும் ஒரு இயக்குனர் என்ன எழுதுகிறாரோ அதை முடிந்த அளவு புரிந்து நடிக்க முயற்சி செய்வேன். ஆனால் வெற்றிமாறன் எழுதிய வசனங்களை வீட்டிற்கு சென்று அதை நான்கு பேருடன் விவாதம் செய்துகொள்ளும் அளவிற்கு எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. விடுதலை திரைப்படத்தைப் பொறுத்தவரை வெற்றிமாறன்தான் வாத்தியார். அவருடன் இருந்து கற்றுக் கொண்ட மாணவனாக என்னை நான் நினைக்கிறேன்.
இதையடுத்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு படம் எடுக்க நிறைய உழைப்பு தேவை. அது ஒருசிலர் மீது மற்றவர்கள் கண்மூடித்தனமாக வைத்துள்ள நம்பிக்கை. நான்கு வருடங்களாக ஒரு படத்தில் மேடு பள்ளம் உள்ளது. இப்படத்தில் நடிக்க வந்தவர்கள் சிலருக்கு திருமணம் ஆகி அவர்களது குழந்தைகள் பள்ளிக்கும் சென்றுவிட்டனர். எல்லோருமே இந்த பயணத்தை மனப்பூர்வமாக செய்தனர். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ரொம்ப நன்றியுணர்வுடன் இருக்கிறேன். இதுபோன்ற டீம் எங்கேயும் பார்க்க முடியாது. இதுபோன்ற ஒரு டீம் இல்லை என்றால் என்னால் இயக்குனர் என்று பெயர் வாங்க முடியாது. எல்லோரும் எனக்கு உதவி செய்கிறார்கள். இளையராஜா பத்து நிமிடத்தில் நான்கு டியூன் ரெடி பண்ணி வைத்திருப்பார். அவரின் நேரம் தவறாமையால் அவருடன் என்னால் வேலை செய்வது கடினமாக இருந்தது.
இளையராஜா நிறைய நியாபகத்துடன் கூர்மையாக வேலை செய்பவர். தனிப்பட்ட விருப்பு வெறுப்பு பற்றி இளையராஜாவுக்கு கவலையில்லை. படத்துக்கு என்ன வேண்டுமோ அதுதான். அவரின் மியூசிக்கல் ஜீனியஸ் மைண்ட்டை பக்கத்தில் இருந்து பார்த்தது ரொம்ப சந்தோஷம். அவருடன் பணியாற்றியது என்னை தனிப்பட்ட விதத்தில் உயர்த்திக்கொள்ள உதவியாக இருந்தது. விஜய் சேதுபதியை எட்டு நாட்கள் நடிக்க அழைத்தேன். ஆனால் 120 நாட்கள் நடித்தார். விஜய் சேதுபதியின் ஈடுபாடு இந்த படத்துக்கு உதவியாக இருந்தது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விடுதலை தான் வாத்தியார். படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது . முடிப்பதற்கு முயற்சி செய்துகொண்டு இருக்கிறோம். இப்படத்தின் பின்னணி இசை பணியை பார்க்க ஆசையாக உள்ளேன். 257 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதுவும் படப்பிடிப்பை நிறுத்திக்கிறேன் என்றுதான் சொன்னேன் முடித்துக்கொள்கிறேன் என்று சொல்லவில்லை. மஞ்சு வாரியர் மூன்று காட்சிகள் என்று சொல்லித்தான் அழைத்தேன். இரண்டு பாட்டு உள்ளது. இந்த கதாபாத்திரம் உண்மையில் ஸ்பெஷலான ரோல்தான்” என்று பேசினார்.
இதையடுத்து பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “உங்களை போலவே நானும் படம் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். நான் தான் முதலில் படத்தை பார்ப்பேன். எனக்கு பிறகு தான் நீங்கள் படம் பார்ப்பீர்கள். படத்திற்கு நான்தான் முதல் ரசிகன் எனக்கு தானே படத்தை முதலில் காண்பிக்கிறீர்கள். முதல் பாகத்தை பார்த்து இதே போல தான் திரைப்படம் இருக்கும் என நினைக்காதீர்கள். விடுதலை இரண்டாம் பாகம் வேறு ஒரு பாதையை நோக்கி செல்கிறது. இந்தத் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும். காரணம் அவ்வளவு உழைப்பு இருக்கிறது.
நான் ஒரு திரைப்படத்திற்கு எப்படி பாடல்கள் இசையமைப்பேன் என்றால், இயக்குநர்கள் சூழ்நிலையை சொல்லும் பொழுது மனதில் ஒன்றும் இருக்காது, வெறுமையாக இருக்கும். ஆனால் அதுவே ஆரம்பித்து விட்டது என்றால் வந்து கொண்டே இருக்கும். இப்படியாக ஒரு படத்திற்கு ஆகாயத்தில் புள்ளி வைக்க வேண்டும் என்ற கோணத்தில் படத்தின் இசையை வழங்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருக்கும். ஆனால் நான் பணியாற்றிய தெலுங்கு படம் ஒன்றில் அவர்களே அனைத்தையும் எழுதிக் கொண்டு வந்து விட்டனர். பிறகு அவர்கள் எழுதி வைத்ததில் இருந்து பாடல்களை அமைத்தேன். என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன் என்னுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப படங்கள் அமைப்பது வேறு, அவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு இசையமைப்பது வேறு” என்று கூறினார்.
What's Your Reaction?