நான் இசையமைப்பது ஆகாயத்தில் புள்ளி வைப்பது போன்றது.. இளையராஜா பேச்சு
’விடுதலை- 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இப்படம் வேறு ஒரு பாதையை நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ‘விடுதலை-2’ திரைப்படம் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது, சூரியை கதாநாயகனாக மாற்றியது வெற்றிமாறன் தான். ராஜீவ் மேனனை பார்த்ததும் எனக்கு யார் என்று தெரியவில்லை. பிறகு தான் கேமரா மேன் என்று தெரிந்தது. அவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். சேத்தன் நடிப்பை பார்த்து நான் பாராட்டினேன்.
ரசிகர்களை போலவே நானும் 'விடுதலை-2' படம் பார்க்க ஆவலாக உள்ளேன். முதல் பாகத்தை பார்த்து இதேபோல தான் இரண்டாம் பாகமும் இருக்கும் என நினைக்காதீர்கள். ‘விடுதலை’ இரண்டாம் பாகம் வேறு ஒரு பாதையை நோக்கி செல்கிறது. இந்தத் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும். காரணம் இதில் அவ்வளவு உழைப்பு இருக்கிறது.
நான் ஒரு திரைப்படத்திற்கு இசை அமைப்பது ஆகாயத்தில் புள்ளி வைப்பது போன்றது. வெற்றிமாறன் சொல்வதையெல்லாம் கேட்டு அப்படியே இசை அமைத்துள்ளேன். நான் இசையமைக்கும் போது வெற்றிமாறன் அதை போனில் பதிவு செய்வார். அந்த வீடியோவை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று நகைச்சுவையாக கூறினார். தொடர்ந்து, இவ்வளவு நேரம் நான் ஒரு நிகழ்வில் இருந்ததில்லை. எல்லோரும் பேசுவதை கேட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
What's Your Reaction?