ஆதிக்கத்தை செலுத்தும் அதிகார மையங்கள்...சாட்டையைச் சுழற்றுவாரா விஜய்?

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், ஊழல் புகார்கள் மற்றும் தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதிகார மையங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி, தூய்மையான ஆட்சி என்ற வாக்குறுதியைக் காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Oct 27, 2026 - 18:00
ஆதிக்கத்தை செலுத்தும் அதிகார மையங்கள்...சாட்டையைச் சுழற்றுவாரா விஜய்?

'மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாகூட தொடமாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டவர்களையும் விடமாட்டோம்!" சட்டப்பேரவை மானியக் கோரிக்கை கூட்டத்தில் முதல்வர் விஜய் கர்ஜித்த வார்த்தைகள் இவை. அவர் இதைச் சொல்லி குறுகிய காலம்கூட கடக்கவில்லை.

அதற்குள்ளாகவே அரசு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள், கட்சி நிர்வாகிகளின் பாலியல் மற்றும் போதைப்பொருள் அட்ராசிட்டி, அரசாங்கத்தின் யூடர்ன் முடிவுகள் என முதல்வரின் எண்ண ஓட்டத்தையும் மீறி, அவரைச் சுற்றியுள்ள பவர் சென்டர்களின் கைகள் 'நீளத்' தொடங்கியிருப்பதால் தமிழக அரசியல் களமே அதகளப்படுகிறது!

இவை எல்லாம் முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கின்றனவா, இல்லை அவரது கவனத்துக்கே செல்வதில்லையா என்பதுதான் பொதுமக்களின் கேள்வி இதுகுறித்து த.வெ.க. அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துவரும் அரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்துறைதான் மின்கட்டண உயர்வு, மின்வெட்டு என கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது.

ஷாக் தரும் மின்துறை!

சமீபத்தில் நடந்த மின் கொள்முதலில் அமைச்சர் நிர்மல்குமாரின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றன. 4,500 மெகாவாட் மின் கொள்முதல் என்று டெண்டர் வெளியிட்டுவிட்டு, பின்னர் சர்ச்சையானதும் 300 மெகாவாட்டாக குறைத்தார். இப்போது, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இன்றி, மாதம் 1,000 யூனிட் என்ற வகையில் ஏழு மாதங்களுக்கான டெண்டர் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. குறைந்த விலைக்கே மின்சாரம் கிடைக்கும்போது, அதிக விலை கொடுத்து வாங்குவதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

'மராட்டிய மாநிலம் ரத்னகிரியில், RGPPL (Ratnagiri Gas and Power Private Limited) நிறுவனத்திடம் ஒரு யூனிட் மின்சாரம் 13 முதல் 15 ரூபாய்க்கு உள்ளாகவே கிடைக்கும்போது, அதைவிடுத்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறார்கள் என்றால், விஷயம் இல்லாமல் செய்ய மாட்டார்கள் என பேச்சு எழுகிறது. அதாவது, முன்பு எல்லாம் ஒரு யூனிட்டுக்கு 25 பைசா என்கிற அளவில்தான், மின்துறை தலைமைக்கு கமிஷன் போய்க்கொண்டிருந்தது எனவும். அது தற்போது 2 முதல் 5 ரூபாய் என்று உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே முன்னாள் சபாநாயகர் அப்பாவு, 'காற்றாலை மின்சாரம் தயாரிக்க தனியாருக்கு ஒப்புதல் வழங்க ஒரு மெகாவாட்டுக்கு 15 லட்சம் வீதம் 1,500 கோடி ரூபாய் வரை அமைச்சர் நிர்மல்குமார் பெற்றிருக்கிறார்' என பகிரங்கமாக எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார்.

நர்சிங் கல்லூரி டீலும் பேரம் பேசிய ஆடியோவும்!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையிலும் சர்ச்சைகள் வெடித்திருக்கின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான 360க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரிகள் இயங்கிவரும் நிலையில், திருநெல்வேலி, திருச்சி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 100 இடங்களுடன் கூடிய புதிய நர்சிங் கல்லூரிகள் திறக்கப்படும்' என்று அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரையில் அறிவித்தார். இவற்றுக்கான அங்கீகாரம் வழங்குவதற்கு தலா ஒரு கல்லூரிக்கு 75 லட்சம் பெறப்பட்டிருப்பதாகவும் அப்பாவு தனது பதிவில் சாடியிருக்கிறார்.

மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான முஸ்தபாவை ஒட்டியும் சர்ச்சைகள் அவரின் உதவியாளர் கனி என்பவர், மாவட்ட பகுதி, வட்ட நிர்வாகிகள் பதவிக்கு பேரம் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் கனி, அமவுண்டைக் கையில கொண்டுவந்துருங்க. 10 லட்சம் ரூபாய் கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க. மதுரை வந்தவுடன் எந்த வார்டுனு பேசிக்கிருவோம்' என்பதாக அது நீள்கிறது.

மெத் உற்பத்தி செய்த நிர்வாகி!

இன்னொரு பக்கம், நாகப்பட்டினத்தில் 135 கிலோ மெத்தம்பெட்டமைனை, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த விவகாரத்தின் முக்கிய மூளையான தவெக நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பூபாலனும் அவரின் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

பூபாலன் ஏற்கெனவே தி.மு.க. மற்றும் வி.சி.க.வில் இருந்தவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்புதான் த.வெ.கவில் ஐக்கியமானார். குறுகிய காலத்தில் த.வெ.க. அதிகார மையத்தினர் சிலரைப் பிடித்து கட்சிப் பதவியையும் பூபாலன் பெற்றிருக்கிறார். பூபாலனின் மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர். சர்வதேச போதைப்பொருட்கள் கும்பலுடன் பூபாலனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படியாக, ஒருவரின் பின்னணியை ஆராயாமல் கட்சிப் பதவிகளில் நியமனம் நடைபெறுகிறது. இதை சில அதிகார மையத்தினர் தங்களது சுயலாபத்துக்காக செய்து, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திவருகிறார்கள்.

வைகோ பகிரங்க அட்டாக்!

இவ்வாறு ஊழல், பேரம் போதைப்பொருட்கள் உள்ளிட்ட விவகாரங்களில் தவெ.க. நிர்வாகிகளின் தலை உருள, இன்னொரு புறம் த.வெ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக சீறியிருக்கிறார். கடந்த அக்டோபர் 19ம் தேதி, செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ஊழலை முற்றிலும் ஒழிப்பது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றது. அதை இந்த அரசு கொஞ்சம் கொஞ்சமாக செய்துவருகிறது. ஆனால், கடந்த ஆட்சிக் காலங்களில் கமிஷன் வாங்கிப் பழகிய அதிகாரிகள், தற்போது தவெக ஆட்சியில் கமிஷன் வாங்க முடியாததால், தவெ.க அரசை சீர்குலைக்கப்பார்க்கிறார்கள்' என பகிரங்கமாக அட்டாக் செய்திருக்கிறார்.

தொல்லையாகும் தொடர் சர்ச்சைகள்!

அதேசமயம், த.வெ.க. ஆட்சி தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகள் வரிசைகட்டுகின்றன. முதல் சர்ச்சை, விஜய்யின் ஜோதிட ஆலோசகரான ரத்தன் பண்டிட்டை அரசு அதிகாரியாக நியமித்ததில்தான் தொடங்கியது. அதற்கு, பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்ததும் அந்த அறிவிப்பை தவெக அரசு திரும்பப் பெற்றது. அதிலிருந்து தொடங்கி சமீபத்தில், பொது (சட்டம் ஒழுங்கு) துறையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி, அதற்கு எதிர்ப்பு வலுத்ததும், அதையும் வாபஸ் பெற்றதுவரை தவெக அரசின் ஆழம் பார்க்கும் முயற்சிகள் நீடித்தன.

இவை மட்டுமல்ல, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு, 'தமிழகத்தில் அரிவாள் வெட்டுக்கும் மின்வெட்டுக்கும் இடையேதான் போட்டியே என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் அளவுக்கு தொடரும் அரிவாள் வெட்டு மற்றும் மின்வெட்டு, குதிரை பேர குற்றச்சாட்டுகள், ஊழல் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்மீது வேகமாக பாய்ந்த விசாரணை அப்படியே ஆமை வேகத்தில் நிதானித்தது, கடந்த ஆட்சியில் ஊழல் சர்ச்சையில் சிக்கிய உயரதிகாரிகள் சிலர் அதே பொறுப்பில் நீடிப்பது, இன்னும் சிலர் வளமான துறையில் நியமிக்கப்பட்டது வரை, தொடரும் சர்ச்சைகள் ஏராளம்.

இவைபோக அமைச்சர்கள் சிலர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள். ஜவுளித்துறையில் டெண்டர் தொடங்கி தற்போது மின்வாரியத்தில் டெண்டர் வரை சர்ச்சைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், யார் மீதும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பதம் பார்க்கும் பவர் சென்டர்கள்!

சரி, இவற்றையெல்லாம் முதல்வர் விஜய் ஏன் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் என்பதே தமிழக மக்களின் மிகப்பெரிய கேள்வி! மே 10ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்று பேசிய விஜய், 'ஜெயித்துவிட்டோம் ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால், இந்த நிமிஷமே அதை அழித்துவிடுங்கள். இங்கு ஒரே சென்டர்தான். அது நான் மட்டும்தான்' என்று சூளுரைத்தார். ஆனால், நிலைமையோ இப்போது தலைகீழ்!

2006-2011 திமு.க ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது மகன்கள் ஸ்டாலின், அழகிரி, மகள்கள் செல்வி, கனிமொழி, தனிப்பட்ட உதவியாளர் நித்யானந்தம், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் என பல பவர் சென்டர்கள் உலா வந்தனர். 

அதுதான் கருணாநிதி ஆட்சியையே பதம் பார்த்தது. இதேபோல், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சசிகலா, அவரின் சகோதரர் திவாகரன், உறவினர்களான இளவரசி, டி.டி.வி.தினகரன், இராவணன் உள்ளிட்ட ஏராளமான பவர் சென்டர்கள் வலம் வந்தனர். அதுவே கட்சிக்கும் ஆட்சிக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தியது.

2021 - 2026 ஸ்டாலின் ஆட்சியிலும் பவர் சென்டர்கள் தொடர்ந்தன. ஸ்டாலினின் தனி உதவியாளர் தினேஷ், மருமகன் சபரீசன், மகன் உதயநிதி. உதய்யின் நண்பர்களான ரத்தீஷ், நவீன், சுரேஷ், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட பலரும் பவர் சென்டர்களாக வலம் வந்தனர். இத்தகைய நபர்களின் நடவடிக்கைகள் தான் கடந்த திமு.க. ஆட்சிக்கே எண்ட் கார்டு போட்டன.

முதல்வரை மீறி 'நீளும்' கைகள்!

ஆலோசர்கள், இதே பாணியில்தான், தற்போதைய தவெக ஆட்சியிலும் முதல்வரின் அமைச்சர்கள், உதவியாளர்கள், நண்பர்கள், ஜோதிடர், ஓட்டுநர், குறிப்பிட்ட அதிகாரிகள் என பவர் சென்டர்களுக்கு பஞ்சமில்லை. இந்த பவர் சென்டர்கள் தங்களது பவருக்கு உட்பட்டு புகுந்து விளையாடுகிறார்கள். மேலும், இந்த பவர் சென்டர்களை காக்கா பிடித்து தேவையானதை செய்துகொள்ள, ஏராளமானோர் நாள்தோறும் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்யின் எண்ணம் தூய்மையானதுதான். நேர்மையானதுதான். மக்களுக்கு நேர்மையான ஆட்சியைக் கொடுக்க நினைக்கிறார்தான். ஆனால், மேற்கண்ட பவர் சென்டர்களால் ஊழலை ஒழிக்கவும், தூய ஆட்சியைக் கொடுக்கவும் முதல்வர் விஜய் மேற்கொள்ளும் முயற்சிகள், விழலுக்கு இரைத்த நீராக வீணாகிக்கொண்டிருக்கின்றன.

அவரின் எண்ணம் நிறைவேற வேண்டுமானால், திமுக, அதிமுக ஆட்சிகளின் பவர் சென்டர்களால் அவர்களுக்கு நேர்ந்த பாதிப்புகளைப் பார்த்து, பாடம் கற்றுக்கொண்டு, தனது ஆட்சியில் தன்னை மீறி 'நீளும்' கைகளுக்கு விலங்கிட வேண்டும். இல்லையெனில், திமுக, அதிமுக ஆட்சிகளுக்கு ஏற்பட்ட நிலைதான் த.வெ.க. ஆட்சிக்கும் ஏற்படும்!" என விரிவாக சொல்லி முடித்தார்.

சாட்டையைச் சுழற்றித்தான் தீர வேண்டும் முதல்வர். சுழற்றுவாரா?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow