மனிதன் அனுப்பிய விண்கலம்..பூமியிலிருந்து பல கோடி மைல்கள் தள்ளி..(நவ.,- 18-ல்)என்ன நடக்கப்போகிறது?
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய வாயேஜர் 1 வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை எட்டுவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விண்வெளியில் சாதனை படைக்கும் வாயேஜர் 1!
கடந்த 1977-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாசா வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகிய இரண்டு விண்கலங்களை விண்வெளி ஆய்வுக்காக அனுப்பியது. சூரியக் குடும்பத்தின் வெளிப்புறப் பகுதிகளை ஆராய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இதில் வாயேஜர் 1 விண்கலம், சூரியக் குடும்பத்தின் எல்லைப் பகுதிகளைக் கடந்து விண்மீன்களுக்கு இடையேயான பகுதியில் பயணித்து வருகிறது. மணிக்கு சுமார் 38,000 மைல் (61,000 கி.மீ.) வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்த விண்கலம், நவம்பர் 18-ம் தேதி பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டவுள்ளது.
அதாவது, பூமியிலிருந்து அனுப்பப்படும் ஒளி அல்லது ரேடியோ சிக்னல் வாயேஜர் 1 விண்கலத்தைச் சென்றடைய சுமார் 24 மணி நேரம் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அது தொலைவில் இருக்கும். 1977-ல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், சுமார் 49 ஆண்டுகள், 2 மாதங்கள், 11 நாட்கள் பயணித்த பிறகு இந்த மைல்கல்லை எட்டவுள்ளது.
ஒளி நாள் என்றால் என்ன?
ஒளியின் வேகம் என்பது பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிக அதிகமான வேகமாகும். ஒளி ஒரு நொடிக்கு சுமார் 1,86,000 மைல்கள் (3 லட்சம் கி.மீ.) பயணிக்கிறது. இந்த வேகத்தின் அடிப்படையில் விண்வெளியில் உள்ள தொலைவுகள் கணக்கிடப்படுகின்றன.
ஒரு நாளில் ஒளி பயணிக்கும் தொலைவே 'ஒளி நாள்' (Light-day) எனப்படுகிறது. இதன் தொலைவு சுமார் 1609 கோடி மைல்கள் (2590 கோடி கி.மீ.).
இதனைப் புரிந்துகொள்ள சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
• பூமி - நிலவு: பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான சராசரித் தொலைவு 3,84,400 கி.மீ. இந்தத் தொலைவை ஒளி கடக்க வெறும் 1.3 வினாடிகள் மட்டுமே ஆகும்.
• பூமி - சூரியன்: பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில் சூரியன் உள்ளது. சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் 20 வினாடிகள் ஆகின்றன.
• பூமி - செவ்வாய்: இந்த இரண்டு கோள்களுக்கும் இடையிலான தொலைவு மாறிக்கொண்டே இருக்கும். இதனால் ஒளி ஒரு கோளிலிருந்து மற்றொரு கோளைச் சென்றடைய 3 முதல் 22 நிமிடங்கள் வரை ஆகலாம்.
• பூமி - நெப்டியூன்: சூரியக் குடும்பத்தின் மிகத் தொலைவில் உள்ள கோளான நெப்டியூன், பூமியிலிருந்து சராசரியாக 450 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. ஒளி இந்தத் தொலைவைக் கடக்க சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும்.
இதேபோல், ஒளி ஒரு வருடத்தில் பயணிக்கும் தொலைவு 'ஒளி ஆண்டு' (Light-year) எனப்படுகிறது. இது சுமார் 5.88 டிரில்லியன் மைல்கள் (9.46 டிரில்லியன் கி.மீ.) ஆகும். நமது சூரியக் குடும்பத்துக்கு அருகில் உள்ள விண்மீன் அமைப்பான ப்ராக்ஸிமா சென்டாரி, பூமியிலிருந்து சுமார் 4.24 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதேபோல், நமது பால்வெளி அண்டத்துக்கு அருகில் உள்ள ஆண்ட்ரோமெடா அண்டம் சுமார் 25 லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
வாயேஜர் 2-ன் பயணம் எங்கே?
வாயேஜர் 1-ன் இரட்டை விண்கலமான வாயேஜர் 2, சூரியக் குடும்பத்தில் வேறொரு பாதையில் பயணித்தது. யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை ஆய்வு செய்வதற்காக அதன் பயணப்பாதை திட்டமிடப்பட்டது.
தற்போது பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டுவதற்கான பாதையில் வாயேஜர் 2-ம் பயணித்து வருகிறது. 2035-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அந்த மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வாயேஜர் 1 விண்கலம் பயணிக்கும் திசையில் பூமியிலிருந்து 17 ஒளி ஆண்டுகளுக்கும் அதிகமான தொலைவில் Gliese 445 என்ற விண்மீன் அமைந்துள்ளது. இன்னும் சுமார் 40,000 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விண்மீனுக்கு 1.7 ஒளி ஆண்டு தொலைவு வரை வாயேஜர் 1 செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஒளியின் வேகத்துடன் ஒப்பிடும்போது மணிக்கு சுமார் 38,000 மைல் வேகத்தில் செல்லும் வாயேஜர் 1-ன் பயணம் மிகவும் மெதுவானதாகத் தோன்றலாம். ஆனாலும், மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு விண்கலம் இத்தனை ஆண்டுகளாக விண்வெளியின் ஆழத்தில் பயணித்து வருவது விண்வெளி ஆய்வின் முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?