களேபரமான கால்பந்து போட்டி... 100 பேர் உயிரிழப்பு... இணையத்தை கலங்கடிக்கும் வைரல் வீடியோ!
கினியா நாட்டில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கினியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் என்சரிகோர் ஆகும். இந்த நகரத்தில் நேற்று (டிச. 1) உள்ளூர் கால்பந்து போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற அணிகள் மிக சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்தனர். மேலும் போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மைதானத்தின் இருபுறமும் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டு ஆரவாரம் தெரிவித்து வருகின்றனர்.
போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நடுவர் ஒருவர் சர்ச்சையான தீர்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒருதரப்பு ரசிகர்களும் ஆத்திரமடைந்து கால்பந்து மைதானத்தை ஆக்கிரமித்தனர். இதைக்கண்ட மற்றொரு தரப்பினரும் கால்பந்து மைதானத்துக்குள் நுழைந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பானதால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது.
கால்பந்து மைதானம் உள்ளே மட்டுமின்றி, மைதானத்திற்கு வெளியேயும் மற்றும் சாலைகளிலும் ரசிகர்கள் ஒருவரை தாக்கிகொண்டும், கட்டிப்புரண்டும் மோதிக்கொண்டனர். மேலும் மைதானம் அருகே உள்ள காவல்நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய மருத்துவர் ஒருவர், “மருத்துவமனைகளில் 100க்கும் அதிமாக உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கும் உடல்களாகவே இருக்கின்றன. இறந்தவர்கள் குறித்த விவரங்களை கண்டறிந்து வருகிறோம். இதுகுறித்தான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட களேபரத்தில் 100க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதுமே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?