சில மணி நேரத்தில் இஸ்ரேலை தாக்க ஈரான் திட்டம்.. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை
இஸ்ரேலை சில மணி நேரங்களில் தாக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நட்பு நாடான இஸ்ரேலை காக்க போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
கடந்த 1ம் தேதி சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரக வளாகம் மீது குண்டுவீசப்பட்டதில், ஈரானின் முக்கியத் தளபதிகள் உள்ளிட்டு 12 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - உரிய தண்டனை வழங்கப்படும் என ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ட்ரோன்கள் மற்றும் துல்லியமான ஏவுகணைகள் மூலம் குண்டுவீச்சு சம்பவங்கள் சில மணி நேரங்களில் இஸ்ரேலின் எல்லைகளில் அரங்கேறும் என தகவல் வெளியாகியுள்ளது.
எல்லைகளில் இருந்து 2,000 கிமீ தொலைவில் இருந்து இலக்குகளை தாக்கும் வகையில், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே எல்லைகளில் இருந்து இருநாடுகளும் பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய நிலையில், பதற்றம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பயணத்தை தவிர்க்குமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளன.
இஸ்ரேலுக்கு தனது ஆதரவை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்த அதே நேரத்தில் ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் - ஈரான் அமைதியை வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் இஸ்ரேலுக்கு உதவும் வகையில், கூடுதல் ராணுவத்தை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அதன்படி செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பயன்படுத்திய யு.எஸ்.எஸ் கார்னி உள்ளிட்ட இரு கடற்படை கப்பல்களை கிழக்கு மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியுள்ளது.
What's Your Reaction?