எகிறிய மருத்துவச் செலவு...திண்டாடும் வி.எஸ்.பாபு குடும்பம்...கண்டுகொள்வாரா முதல்வர் விஜய்?

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மருத்துவச் செலவுகள் தொடர்பாகப் புதிய சர்ச்சை எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 29, 2026 - 12:15
எகிறிய மருத்துவச் செலவு...திண்டாடும் வி.எஸ்.பாபு குடும்பம்...கண்டுகொள்வாரா முதல்வர் விஜய்?

வி.எஸ்.பாபு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கைகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை குறித்த புதிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கிடையே, அவரது மருத்துவச் செலவுகள் தொடர்பாகப் புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ.1 கோடியைத் தாண்டிய மருத்துவச் செலவு?

வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொடக்க நாட்களில், மருத்துவச் செலவுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்றும், தாம் பார்த்துக்கொள்வதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பி, குடும்பத்தினர் ஆரம்பத்தில் மருத்துவச் செலவுகளைச் செலுத்துவதில் அவசரம் காட்டவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், மருத்துவச் செலவு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை அதிகரித்தபோது, மருத்துவமனை நிர்வாகம் பணம் செலுத்துமாறு குடும்பத்தினரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படாததால், வெளிநாட்டிலிருந்து விலையுயர்ந்த ஊசி மருந்து வரவழைக்கப்பட்டு செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு எக்மோ (ECMO) கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவச் செலவு ஒரு கோடி ரூபாயைத் தாண்டியதாகவும், அதில் சுமார் ரூ.45 லட்சத்தை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செலுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலுவைத் தொகையைச் செலுத்துவது யார்?

மீதமுள்ள மருத்துவச் செலவுகளைச் செலுத்துவது தொடர்பாகக் குழப்பம் நீடிப்பதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் பணம் செலுத்துமாறு வலியுறுத்தியபோது, மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் தலையிட்டு, மருத்துவக் கட்டணம் தொடர்பாகக் குடும்பத்தினரிடம் நெருக்கடி கொடுக்க வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்ததாகக் குடும்பத்தினர் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, சில காலம் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், பின்னர் குடும்பத்தினர் சுமார் ரூ.25 லட்சத்தைத் திரட்டிச் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுவரை சுமார் ரூ.70 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் ரூ.40 லட்சத்துக்கும் அதிகமான தொகை நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, வி.எஸ்.பாபுவை வேறு மருத்துவமனைக்கு மாற்றுமாறு எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதால், உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது சிரமமானது எனக் குடும்பத்தினர் கருதுவதாகத் தெரிகிறது.

முதலமைச்சர் அலுவலகம் தலையிட்டதா?

வி.எஸ்.பாபுவின் மருத்துவச் செலவுகள் குறித்து முதலமைச்சர் அலுலவகத்திற்கு மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக, வி.எஸ்.பாபுவின்  குடும்பத்தினர் தெரிவித்துள்ளன. இருப்பினும், மீதமுள்ள தொகையை யார் செலுத்துவது என்பது குறித்துத் தெளிவான முடிவு எட்டப்பட்டதா என்பது தெரியவில்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்வாரா, அமைச்சர் அருண்ராஜ் மூலம் தீர்வு கிடைக்குமா அல்லது முதலமைச்சர் அலுவலகம் தலையிட்டு மருத்துவச் செலவுகளைச் செலுத்துமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், மருத்துவச் செலவுகள் தொடர்பான சர்ச்சை தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.

வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கிறது?

வி.எஸ்.பாபுவின் உடல்நிலை ஆரம்பத்தில் மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும், பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் பேசவும், எழுந்து நிற்கவும், நடக்கவும் முயன்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பும் சிகிச்சையும் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.

அவரது உடல்நிலை குறித்த சமீபத்திய அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகாத நிலையில், தற்போதைய சிகிச்சை நிலை குறித்து உறுதியாகக் கூற முடியாது. இதற்கிடையே, அடுத்த வாரத்தில் அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வி.எஸ்.பாபுவின் சிகிச்சை விவகாரத்தில், மருத்துவச் செலவுகளை யார் ஏற்றுக்கொள்வது, நிலுவைத் தொகை எவ்வாறு செலுத்தப்படும், அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுவாரா என்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த நாட்களில் தெளிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow