savukku shankar: நான் வெளியே போன 5 நிமிஷத்துல... சூறையாடப்பட்ட சவுக்கு சங்கர் இல்லம்
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை பணியாளர்களை பற்றி இழிவாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை முற்றுகையிட்டு 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் நடைப்பெற்ற விவாதத்தில் தூய்மை பணியாளர்களை பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தாமோதரன் தெருவில் வசித்து வரும் சவுக்கு சங்கரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கழிவுநீரை வீட்டிற்குள் ஊற்றி சூறையாடல்:
ஒருக்கட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின் பக்க கதவை உடைத்து சாணி, கழிவு நீர், மனித மலம் ஆகியவற்றை கலந்து சவுக்கு சங்கரின் வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர். வீட்டிலிருந்த பொருட்களும் சூறையாடப்பட்டது. வீட்டில் தனியாக இருந்த சவுக்கு சங்கரின் தாயார் கமலா என்பவரை அநாகரீமாக பேசி வீட்டினுள் புகுந்து போராட்டக்காரர்கள் வீட்டிலுள்ள பொருட்களை சூறையாடிய காணொளி இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கர் தனது சமூக வலைத்தளமான X பக்கத்தில் பதிவிட்டுள்ள விவரம் பின்வருமாறு-
“இன்று காலை 9:30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும், என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?






