அண்ணாமலை டெல்லி பயணம்-15 முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைப்பு
பிரதமர் மோடி தலைமையில் மார்ச் மாதம் முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்
தமிழகத்தை சேர்ந்த 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள் டெல்லியில் மத்திய இணை அமைச்சர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
மக்களவைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.தமிழகத்தில் பாஜகவுடான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிய அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க பாஜக டெல்லி விரும்புவதாகவும், அதற்காக ஜி.கே.வாசன் போன்ற தலைவர்கள் தூதுவராக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், கே.பி.முனுசாமியும் கூறி வருகின்றனர்.
பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.இருப்பினும் தேர்தல் நெருங்கி வருவதால் தொகுதி பங்கீடுகள், வேட்பாளர்கள் குறித்து பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக மாநில தலைவராக இருந்தபோது சினிமா பிரபலங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை பாஜகவில் இணைத்தார். அதன்பின்னர் அண்ணாமலை மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்னர் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், டெல்லியில் இன்று மத்திய இணையமைச்சர்கள் ராஜுவ் சந்திரசேகர், எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தனர். இதில் கரூர்-கு.வடிவேல், அரவக்குறிச்சி -கந்தசாமி, சிங்காநல்லூர் சின்னசாமி, சேலம் எஸ்.இ.வெங்கடாசலம், கன்னியாகுமரி முத்துகிருஷ்ணன், பொள்ளாச்சி எம்.வி.ரத்தினம் உள்பட 15 பேர் அடங்குவர்.பாஜகவில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக தமிழகத்தில் பாஜக கூட்டணி, தொகுதி இழுபறி குறித்து ஆலோசிக்க அண்ணாமலையை பாஜக தலைமை டெல்லி அழைத்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் பாஜகவில் இணைப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து அண்ணாமலை பாஜக தலைமையிடம் தமிழக அரசியல், கூட்டணி நிலவரம் உள்ளிட்டவை குறித்து விளக்குவார் என்று கூறப்படுகிறது. மேலும் வரும் மார்ச் மாதம் பிரதமர் மோடி தலைமையில் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
What's Your Reaction?