AUS vs WI: 27 ரன்களுக்கு ஆல் அவுட்: மேற்கிந்திய தீவுகள் அணியின் பரிதாபங்கள்!

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் மோசமான சாதனையினை நிகழ்த்தியுள்ளது.

AUS vs WI: 27 ரன்களுக்கு ஆல் அவுட்: மேற்கிந்திய தீவுகள் அணியின் பரிதாபங்கள்!
west indies' nightmare: all out for 27 in historic collapse

ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று ஏற்கெனவே தொடரை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கிங்க்ஸ்டன் மைதானத்தில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 225 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வரலாற்றில் இரண்டாவது மோசமான ஸ்கோர்:

85 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கியது மேற்கிந்தியத் தீவு. சொந்த மண் வேறு என்பதால், எப்படியும் ஆறுதல் வெற்றி பெற்றுவிடுவார்கள் என மேற்கிந்தியத் தீவுகளின் ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள்.

ஆனால் நடந்தது வேறு கதை. தங்கள் இரண்டாவது இன்னிங்ஸில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 27 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஸ்கோராகும். 1955 இல் இங்கிலாந்து அணிக்கெதிராக நியூசிலாந்து அடித்த 26 ரன்கள் என்ற மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோரை வெஸ்ட் இண்டீஸ் அணி நூலிழையில் தாண்டியுள்ளது.

27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது மூலம், டெஸ்ட் வரலாற்றில் தனது குறைந்தப்பட்ட ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன்பு இதே மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 47 ரன்கள் எடுத்ததே மேற்கிந்தியத் தீவுகள் அணியின் குறைந்தப்பட்ச ஸ்கோராக இருந்தது.

7 வீரர்கள் டக் அவுட்:

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த போட்டியில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 27 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது ஒருப்புறம் என்றால், மறுப்புறம் 7 வீரர்கள் ஒரே இன்னிங்ஸில் டக் அவுட் என மற்றுமொரு மோசமான சாதனையினை பதிவு செய்துள்ளது. டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 7 வீரர்கள் டக் அவுட் ஆனது இதுவே முதல் முறை.

மிரட்டிய மிட்செல் ஸ்டார்க்:

தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஆடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்,  வெறும் ஒன்பது ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 400வது விக்கெட்டையும் எட்டினார்.

ஸ்காட் போலண்டின் ஹாட்ரிக்:

வெஸ்ட் இண்டீஸ் அணி ரசிகர்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக, ஸ்காட் போலண்ட் நேற்றைய  இன்னிங்ஸில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக ஆஸ்திரேலியா அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற ஜூலை 20 ஆம் தேதி தொடங்க உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow