பிரபல கிரிக்கெட் வீரர் பாலியல் வன்கொடுமை புகாரில் கைது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பெக்கன்ஹாம் மைதானத்தில் MCSAC அணிக்கு எதிராக பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி (pakistan A team) விளையாடிக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி பாலியல் வன்கொடுமை வழக்கில் கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ‘A' அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் ஹைதர் அலி கைது செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கைது நடவடிக்கையினை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஹைதர் அலியை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெலிகாம் ஆசியா ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் ஹைதர் அலி கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் ஹைதரின் பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்ததோடு, அவரை ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
விசாரணை முடியும் வரை ஹைதர் அலியினை இடைநீக்கம் செய்துள்ளதாகவும், இதுத்தொடர்பாக விசாரணையை நடத்தவுள்ளதாகவும் PCB செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட போது ஹைதர் அலி கண்ணீர்விட்டு அழுததாகவும், தான் குற்றமற்றவர் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 6 வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி, 2 மூன்று நாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளன. இந்த இரண்டும் டிராவில் முடிந்தன. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியின் கேப்டன் சவுத் ஷகீல் மற்றும் ஹைதர் அலி தவிர பெரும்பாலான வீரர்கள் புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து திரும்பினர். ஷகீல் தனிப்பட்ட காரணங்களுக்காக துபாயில் தங்கியிருந்தார்.
சர்வதேச அரங்கில் ஹைதர் அலி:
24 வயதான ஹைதர் அலி, பாகிஸ்தானுக்காக 2 ஒருநாள் மற்றும் 35 T20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடினார். அதிரடி வீரராக அறியப்படும் ஹைதர் அலி, சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை மூன்று அரைசதம் விளாசியுள்ளார். 2020 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையிலும் அவர் பாகிஸ்தானுக்காக விளையாடியுள்ளார்.
முன்னதாக, 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் போது covid கட்டுப்பாடுகளை மீறியதற்காக, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அணியிலிருந்து நீக்கப்பட்டும் ஹைதர் அலி தண்டிக்கப்பட்டார். இந்த மாத இறுதியில் ஷார்ஜாவில் நடைபெறவிருந்த டி20 முத்தரப்புத் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி சேர்க்கப்படவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் தவறான நடத்தை காரணமாக பலமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளனர். 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டில் சல்மான் பட், முகமது அமீர், மற்றும் முகமது ஆசிஃப் ஆகிய மூன்று முன்னணி வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை மற்றும் தடை விதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






