ரத்தத்தின் ரத்தமான நடிகை கவுதமி.. எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்.. இதுதான் காரணமா?

Feb 14, 2024 - 21:42
ரத்தத்தின் ரத்தமான நடிகை கவுதமி.. எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்.. இதுதான் காரணமா?

கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜகவிலிருந்து விலகிய நடிகை கவுதமி முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமாகிய எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ரஜினிகாந்தின் குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலம் 1988.ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான  கெளதமி, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தடம் பதித்துள்ளார்.  1997 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த கெளதமி, அக்கட்சியின் இளைஞர் அணி துணை தலைவராக நியமிக்கப்பட்டார். 

ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்காக கவுதமி செய்த பிரசாரங்கள் அதிக கவனம் பெற்றது. ஆனால் மகள் பிறந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற கெளதமி, 2017 இல் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில், பாஜக நிர்வாகி அழகப்பன் என்பவர் தனது சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த கெளதமி, இது குறித்து கட்சி மேலிடத்திலும் முறையிட்டார். ஆனால் சொத்து விவகாரத்தில் கட்சி கை கொடுக்காததால் அதிருப்தி அடைந்த கெளதமி பாஜகவில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.   

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,  நான் என் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறேன். கட்சி மற்றும் தலைவர்களிடமிருந்து எனக்கு எந்த ஆதரவும் இல்லை. அதுமட்டுமல்லாமல், என் நம்பிக்கைக்கு துரோகம் செய்து என் வாழ்நாள் சம்பாத்தியத்தை ஏமாற்றியவன் ஒருவனுக்கு கட்சியில் பலர் தீவிரமாக உதவுகிறார்கள் என தனது ஆதங்கங்கத்தை கொட்டித் தீர்த்தார். 

மேலும் 25 வருடங்கள் கட்சிக்கு உறுதியான விசுவாசம் இருந்தும், எனக்கு அழகப்பன் விவகாரத்தில் முழு ஆதரவு இல்லாததை உணரும்போது உடைந்து போய் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் சொத்து அபகரிப்பு வழக்கில் கெளதமிக்கு ஆதரவாக காவல்துறை கைகொடுக்கவே, சம்பந்தப்பட்ட பாஜக நிர்வாகி அழகப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மொத்தமாக கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கின் விசாரணை  நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவிலிருந்து விலகிய கெளதமி எந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வார் என அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் இன்று அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.  சென்னை, கீரீம்ஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்த கெளதமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow