அபுதாபியில் பொன்னான அத்யாயம்.. இந்து கோவில் இனி ’இதன்’ அடையாளம்..! புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!
வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அபுதாபியில் முதல் இந்துகோயிலை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இக்கோயில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இருக்கும் எனவும், இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பொற்கால அத்தியாயத்தை எழுதியுள்ளதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக கோயில் கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட அபுதாபி அரசு, துபாய் - அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா அருகே முரைக்கா பகுதியில் கோயில் கட்ட 55 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கி கோயில் கட்ட அனுமதி அளித்தது.
அதன்படி 2018ஆம் ஆண்டு துபாயில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில், அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து கோயிலில் நிறுவப்பட்டுள்ள சுவாமி நாராயணன் சிலைக்கு பிரதமர் பூஜை செய்தார்.
தொடர்ந்து திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறுகையில், இதுவரை புர்ஜ் கலீஃபா, ஃபியூச்சர் மியூசியம், ஷேக் சயீத் மசூதி மற்றும் பிற ஹைடெக் கட்டிடங்களுக்கு பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகம், தற்போது மற்றொரு கலாச்சார அத்தியாயத்தை சேர்த்துள்ளது. அதன் அடையாளம் வரும் காலங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.
இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், மேலும் மக்கள் தொடர்பும் அதிகரிக்கும். ஒட்டுமொத்த இந்தியா மற்றும் மில்லியன் கணக்கானோர் சார்பாக உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள், சார்பாக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
இந்த கோயில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக இருக்கும்,கோயில் கட்டுமானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் பங்கு பாராட்டத்தக்கது. UAE ஒரு பொன் அத்தியாயத்தை எழுதியுள்ளது. இந்த கோவிலின் திறப்பு விழா பல வருட கடின உழைப்பு மற்றும் பலரின் கனவுகள் கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுவாமிநாராயணின் ஆசீர்வாதமும் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
What's Your Reaction?