விஜய்யின் திருமண நாளில் மதுரையில் தவெக மாநாடு 2.0!
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைப்பெற உள்ளது. மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா இன்று மதுரையிலுள்ள பாரப்பத்தி பகுதியில் நடைப்பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமையன்று மதுரையில் நடைபெற உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினை எதிர்த்து தேர்தல் களத்தில் களமிறங்க உள்ளது தமிழக வெற்றிக் கழகம். நடிகராக வலம் வரும் விஜய் முழுநேர அரசியல்வாதியாக எப்போது களமாடுவார் என அவரது ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் காத்திருக்கும் நிலையில், மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைப்பெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மாநாட்டில் கவனம் பெற்ற விஜய் பேச்சு:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் 27, 2024 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி. சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து, கொள்கைப் பாடலையும் வெளியிட்டார். கட்சியின் நிர்வாகிகளையும் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அந்த மாநாட்டில் சுமார் 40 நிமிடங்கள் வரை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் மனம் திறந்து தனது அரசியல் பிரவேசம் குறித்து விஜய் பேசினார். தனது கட்சியின் கொள்கைத் தலைவர்களாக பெரியார், காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரை தேர்ந்தெடுத்தது ஏன்? எனவும் மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு விளக்கமளித்தார் விஜய்.
“பாம்பாக இருந்தாலும், பாலிட்டிக்ஸாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியலில் களமிறங்கியுள்ளதாகத்” தெரிவித்த விஜய், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என முழக்கமிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆட்சி, அதிகாரம் இரண்டிலும் பங்கு என அறிவித்த நிலையில், சில கட்சிகள் தங்கள் பக்கம் கூட்டணிக்கு வரும் என தவெக தரப்பினர் நம்பிய நிலையில், அது எதிர்மறையாக முடிந்தது. தற்போது வரை தனித்து தேர்தலில் களமாட வேண்டிய சூழ்நிலை தான் நிலவுகிறது. மதுரையில் நடைப்பெறும் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் பேசப்போவது என்ன? அது அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முதல் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் கலந்துக் கொண்ட நிலையில் மதுரையில் நடைப்பெறும் மாநாட்டிலும் திரளான ரசிகர்கள், தொண்டர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் திருமண நாளில் மாநாடு:
மாநில மாநாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று தான் விஜய்க்கு திருமண நாளும் கூட. நடிகர் விஜய்- சங்கீதா இருவருக்கும் இடையேயான திருமணம் கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






