ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்.. போட்டி நடைப்பெறும் இடம், தேதி அறிவிப்பு!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வருகிற 2028 ஆம் ஆண்டு நடைப்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், போட்டி நடைப்பெறும் மைதானம் மற்றும் போட்டி நடைப்பெறும் தேதிகள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

உலகளவில் கால்பந்திற்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விளையாட்டாக கிரிக்கெட் திகழ்கிறது. அதற்கு முக்கிய காரணம் இந்தியா என்றால் மிகையல்ல. உலகளவில் அதிகளவில் மக்கள் தொகையினை கொண்ட நாடாக விளங்கும் இந்தியாவில், கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அது இந்தியர்களின் உணர்வுகளோடு சம்மந்தப்பட்டது.
128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்:
கடந்த சில ஆண்டாகவே ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டினை மீண்டும் இடம்பெற செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதற்கு நல்ல பதிலும் கிடைத்தது. வருகிற 2028 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெறவுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்று இருந்தது. கிரிக்கெட் போட்டியின் அமைப்பு ஒலிம்பிக் தொடருக்கு ஏற்ற வகையில் இல்லாத காரணத்தினால், (டெஸ்ட்- 5 நாட்கள் , ஒருநாள்- 50 ஓவர்) ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்படாமல் இருந்தது. ஆனால், டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கிரிக்கெட் விளையாட்டு புது கவர்ச்சி தன்மையினை பெற்றது.
ஒரு போட்டி அதிகப்பட்சம் 6 மணி நேரத்திற்குள் முடிந்துவிடும் என்பதால், ரசிகர்கள் மத்தியிலும் டி20 போட்டிகள் மீது ஆர்வம் அதிகரித்தது. தற்போது பல்வேறு நாடுகளும் ஐபிஎல் போன்று, டி20 பிரீமியர் தொடர்களை நடத்தி வரும் நிலையில் ஒலிம்பிக் கமிட்டியும் டி20 போட்டிகளை ஒலிம்பிக்கில் இடம்பெற செய்ய ஒப்புதல் வழங்கினர். அதன் தொடர்ச்சியாக தான், 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது.
போட்டி நடைப்பெறும் தேதி & இடம்:
ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான T20 போட்டிகள், 2028 ஆம் ஆண்டு ஜூலை 12 முதல் ஜூலை 29 வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதக்கப் போட்டிகள் ஜூலை 20 (பெண்கள்) மற்றும் ஜூலை 29 (ஆண்கள்) ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒரு அணியில் 15 வீரர்கள் இருப்பார்கள் (மாற்று வீரர்கள் உட்பட). அனைத்து கிரிக்கெட் போட்டிகளும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப்பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள பொமோனா ஃபேர்ப்ளெக்ஸ் (Pomona Fairplex) மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு பெரும்பாலும், இரண்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 9:00 மணி மற்றும் மாலை 6:30 மணி (உள்ளூர் நேரம்) என இரண்டு நேரங்களில் போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
6 அணிகள் எது?
LA28 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் குறித்து தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அமெரிக்கா ஒலிம்பிக் போட்டியினை நடத்துவதால் அமெரிக்கா நேரடியாக தகுதி பெறும் எனவும் கூறப்படுகிறது. மீதமுள்ள இடங்களுக்கு ஐசிசி தரவரிசையின் அடிப்படியில் மற்ற அணிகள் தகுதி பெறும் எனவும் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் நடைப்பெற உள்ள ICC-யின் வருடாந்திர மாநாட்டில் இதுக்குறித்து விவாதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






