சாலை இடிந்து அடுத்தடுத்து கவிழ்ந்த வாகனங்கள்... 24 பேர் பலி.. சீனாவில் பரபரப்பு..

சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டு 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் சீன கடற்கரையை ஒட்டியுள்ள குவாங்டாங் மாகாணத்தில் கடந்த வாரத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
இந்த நிலையில் குவாங்டாங் மாகாணத்தின் Meizhou நகரில் இருந்து தபு கவுண்டி நகருக்கு செல்லும் நெடுஞ்சாலையில் திடீரென மண் சரிந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த 20 வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து 500-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பெய்து வரும் தொடர் கனமழையால் சாலை இடிந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
What's Your Reaction?






