பதற வைக்கும் பறவைக் காய்ச்சல்..! தப்பிக்க என்ன வழி..? சுகாதாரத்துறை இயக்குனர் அட்வைஸ்...

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் பிரத்யேக பேட்டி

May 1, 2024 - 19:58
பதற வைக்கும் பறவைக் காய்ச்சல்..!  தப்பிக்க என்ன வழி..? சுகாதாரத்துறை இயக்குனர் அட்வைஸ்...

அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக மக்கள் அதில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும். அதற்கான முன்னெச்சரிக்கை என்ன என்பது குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் குமுதத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் தொடர்பாக பேசிய அவர்,

"தற்போது நமது அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, கால்நடைத்துறையுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பறவைக்காய்ச்சல் பரவுகிறதா என்பதை கண்காணித்து வருகிறோம். பறவைக் காய்ச்சலால் பறவைகள் செத்து விழுந்தால், உடனடியாக அங்கு சோதனை செய்து அந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவிலும் உள்ள அனைத்து பறவைகளையும் அழித்து விடுவோம், இதனால் அந்த பாதிப்பு அங்கிருந்து மற்ற இடத்திற்கு பரவாமல் தடுக்கப்படும். 

பாதிப்பு ஏற்பட்ட பறவைகளால் தான் மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனாலே நாம் அதை அங்கேயே அழித்து விடுவோம். மற்ற இடத்திற்கு பரவாமல் தடுத்து விடுவோம். 

கோழி பண்ணைகள் வைத்துள்ளவர்களுக்கு கால்நடைத்துறை சார்பில் அறிவுரைகள்  வழங்கப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை பறவைகள் மற்றும் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

காய்ச்சலில் பாதிக்கப்பட்ட இறைச்சிகள் எளிதில் விற்பனைக்கு வராது. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் சமைக்கக்கூடிய இறைச்சியை அரைவேக்காடு இன்றி, முழுமையாக வேகவைத்து உண்ண வேண்டும். இதனால் வைரஸ் முழுமையாக அழிந்துவிடும். நாம் பாதிக்கப்படமாட்டோம்" என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow