ஏமனில் சரக்குக்கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்! 2 பேர் பரிதாப பலி...
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலுக்கு பிரட்டன் தூதரகம் கண்டனம்
ஏமன் நாட்டில் சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடந்துவரும் சூழலில், ஏமன் நாட்டில் உருவான கிளர்ச்சிப் படையான ஹவுதி, இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்வினையாக இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அதேபோல் கடந்தாண்டு நவம்பர் 19-ம் தேதி செங்கடலில் வணிகக் கப்பல் ஒன்றை சிறைபிடித்து தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் உலக கவனம் பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏமனின் ஏடன் வளைகுடாவில் பயணித்த லிபெரியா நாட்டுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்ட இந்த எதிர்பாராத தாக்குதலில் கப்பல் பணியாளர்கள் 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அச்சமடைந்து கப்பலில் இருந்தவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு ஆறுதலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் தெரிவித்துள்ள பிரிட்டன் தூதரகம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இத்தகைய பொறுப்பற்ற தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
What's Your Reaction?