சிறுவனிடம் மன்னிப்புக் கேட்ட ரிங்கு சிங்... ஏன்? எதற்கு?
ரிங்கு சிங் அடித்த பந்து சிறுவனின் தலையில் பட்டதை அறிந்து, மன்னிப்புக்கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரிங்கு சிங் தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது அவர் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்துத் தெறிக்கவிட்டது இன்று வரை ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சகர்களாலும் மறக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. அதன் மூலம் அவர், இந்திய அணியிலும் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
இந்த சூழலில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் ஏற்கனவே தங்கள் பயிற்சியைத் துவங்கியுள்ளனர். சர்வதேச வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட இந்தியாவிற்கு வந்துகொண்டுள்ளனர். கொல்கத்தா அணியில் விளையாடி வரும் ரிங்கு சிங், இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவர் அடித்த பந்து, மைதானத்தின் மற்றொரு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவனின் தலையை தாக்கியது.
இதைக்கண்டு பதறிய ரிங்குசிங் உடனடியாக சிறுவனிடம் ஓடிப்போய் மன்னிப்புக் கேட்டதோடு, பயிற்சியாளரிடம் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொப்பியை வாங்கி, கையெழுத்திட்டு பரிசாக அளித்தார். இதுதொடர்பான வீடியோவை கொல்கத்தா அணி நிர்வாகம் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது. ரிங்குசிங்குவின் இந்த அன்பான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
What's Your Reaction?