டி20 உலகக்கோப்பை: அரையிறுதி போட்டி மழையால் ரத்தானாலும் இந்தியா பைனலுக்கு செல்லும்... எப்படி தெரியுமா?

நாளை இந்தியா-இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டிக்கும், இறுதிப்போட்டி நடக்கும் 29ம் தேதிக்கும் இடையே 1 நாள் மட்டுமே இடைவெளி உள்ளதால் 'ரிசர்வ் டே' ஏதும் வைக்கப்படவில்லை. அதே வேளையில் அரையிறுதி போட்டிகள் மழையின் காரணமாக தாமதமாக தொடங்கினால் கூடுதலாக 250 நிமிடங்கள் வழங்கப்படும்

Jun 26, 2024 - 17:32
டி20 உலகக்கோப்பை: அரையிறுதி போட்டி மழையால் ரத்தானாலும் இந்தியா பைனலுக்கு செல்லும்... எப்படி தெரியுமா?
இந்தியா

கயானா: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடந்த டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. 

ஆப்கானிஸ்தான்-தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் அரையிறுதி போட்டியில் மோதுகின்றன. ஆப்கானிஸ்தான்-தென்னாப்பிரிக்கா  அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி கயானாவில் இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி பலமான இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

அதே வேளையில் நாளை போட்டி நடக்கும் கயானாவில் மழை பெய்ய 90% வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கயானாவில் மழை பெய்து வருகிறது. இந்த மழை நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகள் மழையால் ரத்து செய்ப்பட்டால், அந்த போட்டி 'ரிசர்வ் டே' எனப்படும் மறுநாள் நடக்கும். ஆனால் இந்த டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் 'ரிசர்வ் டே' ஏதும் கிடையாது. 

நாளை இந்தியா-இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டிக்கும், இறுதிப்போட்டி நடக்கும் 29ம் தேதிக்கும் இடையே 1 நாள் மட்டுமே இடைவெளி உள்ளதால்  'ரிசர்வ் டே' ஏதும் வைக்கப்படவில்லை. அதே வேளையில் அரையிறுதி போட்டிகள் மழையின் காரணமாக தாமதமாக தொடங்கினால் கூடுதலாக 250 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த கூடுதல் நிமிடங்களில் போட்டிகளின் முடிவு தெரிய வாய்ப்புள்ளது. 

ஆனால் போட்டி முழுமையாக ரத்தானால் மறுநாள் தள்ளி வைக்கப்படாது. அப்படி ஒருவேளை நாளை இந்தியா-இங்கிலாந்து போட்டிகள் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டால் இந்தியா தானாகவே இறுதிப்போட்டிக்கு சென்று விடும்.

ஏனெனில் ஐசிசி விதிகளின்படி, இந்த உலகக்கோப்பை தொடரில் 'சூப்பர் 8' சுற்று முடிவில் தங்களது பிரிவில் முதல் பிடிக்கும் அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும். இதன்படி பார்த்தால்  'சூப்பர் 8' சுற்று முடிவில் 'குரூப் 1' பிரிவில் இந்தியா அதிக புள்ளிகளை (6 புள்ளிகள்) பெற்று முதலிடத்தில் உள்ளதால் இறுதிப்போட்டிக்கு சென்று விடும். 

அதே வேளையில்  'குரூப் 2' பிரிவில் இருக்கும் இங்கிலாந்து 4 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருப்பதால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாது. ஏனெனில் 'குரூப் 2' பிரிவில் 6 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இதேபோல் ஆப்கானிஸ்தான்-தென்னாப்பிரிக்கா போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும்,  'குரூப் 2' பிரிவில் முதலிடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு சென்று விடும். ஆப்கானிஸ்தான் வெளியேறி விடும்.

ஆகையால் மழையால் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்தியா, தென்னாப்பிரிக்கா ரசிகர்களும், போட்டி முழுமையாக நடைபெற வேண்டும் என்று இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ரசிகர்களும் கடவுளை வேண்டி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow