ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பழமையான திருமால், வைஷ்ணவி சிற்பங்கள் கண்டெடுப்பு...
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமால், வைஷ்ணவி சிற்பங்களை தொல்லியல் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ளது அம்மாபட்டி ஊராட்சி. இந்த ஊரில் அருகே ஓடும் அர்ச்சுனா ஆற்றின் கரையில், பழமையான சிற்பங்கள் இருப்பதாக, அப்பகுதியை சேர்ந்த வீரையா என்பவர் தொல்லியல் துறைக்குத் தகவல் அளித்தார்.
இதையடுத்து, அங்குச் சென்ற தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, திருமால், வைஷ்ணவி, லிங்கம், நந்தி, காளி சிற்பங்கள் இருப்பதைக் கண்டெடுத்து மீட்டனர். இந்த சிற்பங்கள் சுமார் இங்கு 1,200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பகுதியில் காணப்படும் கல்வட்டம், கல்திட்டை உள்ளிட்டவை இரும்பு காலாட்டத்தைச் சேர்ந்த கற்களாக இருக்கலாம் என்றனர்.
2,000 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் இரும்பு உருக்கு உலையும், மக்கள் குடியிருப்பும் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறும் தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் இடங்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?