பூதாகரமாகும் ஸ்மோக் பிஸ்கட்...சென்னையில் உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜன் பயன்படுத்த தடை?..
ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவன் அவதியடைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப் பொருள்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஸ்மோக் பிஸ்கட்டை குடும்பத்தினருடன் சென்று ஆசை ஆசையாய் வாங்கி சிறுவன் மூச்சுவிட முடியாமல் துடிதுடித்த வீடியோவை இயக்குநர் மோகன்ஜி வெளியிட்டிருந்தார். வீடியோவில் கன்னடம் மொழி பேசப்பட்டதாகவும் இது கர்நாடகாவில் நடந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் இறந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
புதுச்சேரியில் ஏற்கனவே பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தடைவிதிக்கபட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்மோக் பிஸ்கட் அடுத்த புயலாக உருவாகி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஸ்மோக் பிஸ்கட் சென்னை தீவுத்திடல் பொருட்காட்சி, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடக்கும் விழாக்களிலும் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், திரவ நைட்ரஜன் கலந்த பொருட்களை எடுத்துக்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் எச்சரிக்கை விடுவித்துள்ளனர். மேலும் அத்தகைய திரவ நைட்ரஜன் உணவுப் பொருட்கள் சென்னையில் விற்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?