ஐபிஎல் பெட்டிங்.. சென்னையில் சூதாடிய கும்பல்... 6 பேரை ரவுண்டு கட்டி தூக்கிய போலீஸ்
சென்னையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் போட்டிகளை பார்த்து வருகின்றனர்.
இதனிடையே ரசிகர்களை ஏமாற்றும் வகையில் போலி டிக்கெட் போன்ற மோசடிகள் அரங்கேறி வருகின்றன. மேலும், ஒரு சிலர் சட்டவிரோதமாக ஐபிஎல் பெட்டிங் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் DREAM 11 ஐபிஎல் பெட்டிங் செயலியில் மோசடி நடைபெற்றதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை செளகார்பேட்டையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்று தற்போது சிக்கியுள்ளது. Reddy anna Offical என்ற செயலி மற்றும் இணையதளம் மூலம் சூதாட்டம் நடத்தி பல கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக போலீசாருக்கு புகார் வந்தது.
அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய எஸ்பிளனேடு போலீசார், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தீப், கணேஷ், ராஜேஷ் குமார் ஜெயின், தீரஜ், ஜிதேந்திரா, அங்கித் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கும்பல் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தான் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
Reddy anna Offical என்ற இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் இல்லை என்பதும் லிங்க் மூலம் செயலியை பதிவிறக்கம் செய்து சூதாட்டத்தில் ஈடுபடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?