மு.க.ஸ்டாலின், உதயநிதி பதவி விலகணும்.. எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் அதிரடி...

போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை அதிமுக ஓயாது

Mar 10, 2024 - 14:54
மு.க.ஸ்டாலின், உதயநிதி பதவி விலகணும்.. எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் அதிரடி...

போதைப் பொருள் கடத்தலில் சிக்கியிருக்கும் ஜாபர் சாதிக்குடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் நெருக்கம் காட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதால், அவர்கள் பதவி விலக வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக விளங்கி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் இளைஞர்கள், பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து விடுவார்கள் என்று குற்றம்சாட்டினார். திமுக அரசின் அலட்சியத்தின் காரணமாகவே போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ஆளுநரிடம் எடுத்துரைத்தாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். 

திமுகவின் அயலக அமைப்பின் துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்டு அதில் சம்பாதித்த பணத்தைத் திரைப்படம் தயாரிப்பு, ஹோட்டல், திமுக நிர்வாகிகளுக்கு நிதியளித்தது உள்ளிட்டவை குறித்து செய்திகள் வெளி வந்துள்ள நிலையில் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தரவேண்டும் என்று ஆளுநரிடம் தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும் உண்மையை மறைப்பதற்கான திமுக நாடகத்தை அரங்கேற்றி வருவதாகவும், கடந்த 10 நாட்களில் அதிகளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை காவல் துறை செயல்படாமல் இருந்ததாகவும்  அவர் குற்றஞ்சாட்டினார். தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை அதிமுக ஓயாது என்று கூறிவிட்டு, எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow