10 புதிய வந்தே பாரத் ரயில்சேவை தொடக்கம்.. இதுவெறும் டிரைலர் தான் - மோடி
சென்னை - மைசூரு, அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத் விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 10 அதிவிரைவு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ரூ.1,06,000 கோடி மதிப்பிலான ரயில்வே கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறைகள் சார்ந்த திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சென்னை - மைசூரு, அகமதாபாத் - மும்பை உட்பட நாட்டின் 10 வழித்தடங்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் சேவைகளைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, உரையாற்றிய அவர், ”இந்தியா இளைஞர்களை அதிகமாகக் கொண்ட நாடாக உள்ளது. இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்கள், தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களின் வளமான எதிர்காலத்திற்கானது. சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசு, சுயநலமான அரசியலால் ஆனது. அதற்குப் பலியானதில் ரயில்வே துறையும் ஒன்று. நான் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக ரயில்வே பட்ஜெட்டை, அரசின் பட்ஜெட்டுடன் இணைத்தேன். அதன் மூலம் ஒதுக்கப்படும் அரசின் நிதி ரயில்வே துறையை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
பாதாளத்திலிருந்த ரயில்வே துறையை பாஜக அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்தி மீட்டுள்ளது. தற்போது, ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு அரசுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. நாட்டின் இளைஞர்கள் எப்படிப்பட்ட அரசு, எப்படிப்பட்ட ரயில்வே தேவை முடிவு செய்ய வேண்டும். இந்த 10 ஆண்டு சாதனை வெறும் டிரைலர் தான், இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது”என்றார்.
What's Your Reaction?