மோடி அரசு கொடுத்த வாக்குறுதி..! நள்ளிரவில் பரபரத்த மீட்டிங்.. 2 நாட்கள் நிறுத்தப்படும் “டெல்லி சலோ”..!
2 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
சில வேளாண் பொருட்களை 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்க மத்திய அரசு உறுதியளித்ததைத் தொடர்ந்து, பரிசீலித்து முடிவெடுக்கும் வகையில் "டெல்லி சலோ" போராட்டத்தை 2 நாட்களுக்கு விவசாயிகள் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர்.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க அவசர சட்டம் இயற்ற வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், விவசாயி - விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும், கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டிராக்டர்களுடன் சென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாமிட்டுள்ளனர்.
தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, நித்யானந்த் ராயுடன் 4ம் கட்டப் பேச்சுவார்த்தையில் விவசாயிகளுடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் பங்கேற்றார். அப்போது விவசாயிகளுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி 5 ஆண்டுகளுக்கு பருப்பு வகைகள், மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை குறைந்தபட்ச ஆதார விலையில் அரசு அமைப்புகள் வாங்கும் திட்டத்தை மத்தியஅரசு முன்மொழிந்தது.இருப்பினும் மற்ற கோரிக்கைகள் தொடர்பான உறுதியான முடிவுகளை மத்திய அரசு தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவை பரிசீலிக்கும் வகையில் 2 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.பிற கோரிக்கைகளையும் சேர்த்து ஏற்காவிடில், 21ம் தேதி மீண்டும் டெல்லி சலோ போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
What's Your Reaction?