வேட்பாளர்களின் செலவு வரம்புகள் அதிகரிப்பு.. இனி ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்... தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.25 லட்சமும், சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.12 லட்சமும் அதிகரிக்கப்பட்ட செலவின உச்சவரம்பு

Mar 18, 2024 - 17:57
Mar 18, 2024 - 18:09
வேட்பாளர்களின் செலவு வரம்புகள் அதிகரிப்பு.. இனி ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம்... தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் போது ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற வரம்பு விதிமுறைகளை மாற்றி புதிய உச்ச வரம்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு வரம்புகள் 2014ஆம் ஆண்டு ரூ.25 லட்சத்தில் இருந்து அதிகப்படியாக ரூ.40 லட்சம் என மாற்றம் செய்யப்பட்டது. அதன்பின் சிறிய சதவீதங்கள் மட்டுமே அதிகரித்து அறிவிக்கப்பட்டன. 2014-ல் 83.4 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, 2021-ல் 93 கோடியை தாண்டியது. அதனால், விலைவாசி உயர்வு, மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற பல காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தல் செலவினங்களுக்கான வரம்புகளை மறு ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீ ஹரீஷ் குமார் தலைமையிலான குழுவை தேர்தல் ஆணையம் அமைத்தது. அந்த குழு ஆய்வு செய்து சமர்பித்த அறிக்கையில், 32.08% வரை தேர்தல் செலவின உச்சவரம்பை அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் கடந்த 7 ஆண்டுகளில் செலவின பணவீக்க குறியீடு 240-ல் இருந்து 317ஆக உயர்ந்திருப்பதையும் அக்குழு சுட்டிக்காட்டியிருந்தது. 

இந்நிலையில் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் துவங்கப்படவுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கும் தேர்தல் முடிவுற்று ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படுகிறது. இதேவேளையில், 4 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கான  சட்டசபை தேர்தல், அத்துடன் பல மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெறவுள்ளன. இதனிடையே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வேட்பாளர்  ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. அத்துடன், சட்டமன்ற தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது. 2014-ல் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு  ரூ.40 லட்சம் வரையிலும், சட்டமன்ற தேர்தலுக்காக ரூ.16 லட்சமும் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது கடந்தாண்டை விட கூடுதலாக நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ.25 லட்சமும், சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.12 லட்சமும் அதிகரித்துள்ளது. இதற்கு மேல் செலவு செய்யும் வேட்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.தற்போது 2024-ல் வாக்காளர்கள் எண்ணிக்கை  96.9 கோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow