மும்பையில் சுழன்றடித்த புழுதி புயல்.. சடசடவென முறிந்து விழுந்த ராட்சத பேனர்..14 பேர் பலியான சோகம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று புழுதி காற்றுடன் கனமழை கொட்டியது. சுழன்றடித்த காற்றுக்கு ராட்சத விளம்பர பேனர் பெட்ரோல் பங்க் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பையின் பல்வேறு பகுதிகளில் புழுதிப்புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அதன் காரணமாக மும்பையின் முக்கிய நகரங்கள் புழுதி மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து நகரின் பல பகுதிகளில் மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் புயல் காரணமாக காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மீது ராட்சத விளம்பர பேனர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பெட்ரோல் பங்க்கில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ராட்சத விளம்பர பேனருக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
பேனர் முறிந்து விழுந்ததில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 70 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராட்சத விளம்பர பேனர் முறிந்து விழுந்ததில் பல கார்களும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும், படுகாயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பான சிகிச்சை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். விபத்து காரணமாக பேனர் வைத்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மும்பை, தானே பால்கர் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மிதமான முதல் அதீத மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விளம்பர பேனர் வைத்த நிறுவனத்திற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும், 40க்கு 40 அளவில் மட்டும் பேனர் வைக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் விபத்துக்குள்ளான பேனர் 120க்கு 120 அளவில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகிகள் அனுப்பி நோட்டீஸில் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?