பொய்..! பொய்..! பொய்..!  "நான் ராஜினாமா செய்யவில்லை" - இமாச்சல் முதலமைச்சர் விளக்கம்...

Feb 28, 2024 - 16:40
பொய்..! பொய்..! பொய்..!  "நான் ராஜினாமா செய்யவில்லை" - இமாச்சல் முதலமைச்சர் விளக்கம்...

இமாச்சல பிரதேச முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் விளக்கமளித்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது. முதலமைச்சராக சுக்வீந்தர் சிங் உள்ளார். இந்த நிலையில், அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போதைய அரசியல் சூழலில் அரசின் அங்கமாக நான் நீடிப்பது சரியல்ல என்பதால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதற்கு முன்பு பாஜக எம்.எல்.ஏக்கள், அம்மாநில ஆளுநரை சந்தித்து மாநில அரசுக்கு எதிராக புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்களித்ததால், பாஜக வேட்பாளரான ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது ஒரு புறம் இருக்க, இம்மாச்சல பிரதேச சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித்தலைவர் உள்பட 15 பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதால் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டது. இப்படி குழப்பமான அரசியல் சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம் சரிய இருப்பதாகவும், கூடிய விரைவில் முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் சுக்வீந்தர் சிங், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் எனவும், சட்டசபையில் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow