பிரியாணி தட்டில் ராமர் படம்...எதார்த்தமா? உள்நோக்கமா? டெல்லியில் பரபரப்பு...
ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை செய்தவர் கைது
டெல்லியில் ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை செய்த உணவக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜஹாங்கிர்புரி பிரியாணி கடை ஒன்று செயல்படுகிறது. அந்த உணவகத்தில் ராமர் படம் கொண்ட பேப்பர் தட்டில் பிரியாணி பரிமாறப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
இதனால் ஆத்திரமடைந்த ராமர் பக்தர்கள், பிரியாணி கடை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரியாணி கடையை இழுத்து மூடும்படி கோஷம் எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடமறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார், ராமர் படம் கொண்ட பேப்பர் தட்டுகளை பறிமுதல் செய்து, உணவக உரிமையாளரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அதன்பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். போலீசார் விசாரணையில், உணவக உரிமையாளர் உள்நோக்கத்துடன் ராமர் படம் கொண்ட பேப்பர் தட்டுகளை பயன்படுத்தவில்லை என்பதும், தொழிற்சாலையில் இருந்து 1,000 பேப்பர் தட்டுகளை வாங்கியதும், அதில் 4 தட்டுகளில் மட்டும் ராமர் படம் கொண்ட பேப்பரில் தட்டு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உணவக உரிமையாளரை போலீசார் விடுவித்தனர்.
What's Your Reaction?