"26 நாளா என்ன பன்னீங்க?" நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க SBI-க்கு உச்சநீதிமன்றம் கெடு !!

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் நன்கொடை விவரங்களை வழங்க காலஅவகாசம் கேட்ட SBI-ன் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நாளைக்குள் விவரங்களை வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பிற்குள்ளாக நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Mar 11, 2024 - 13:21
"26 நாளா என்ன பன்னீங்க?" நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க SBI-க்கு உச்சநீதிமன்றம் கெடு !!


அரசியல் கட்சிகள் நிதி திரட்ட ஏதுவாக கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டம் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசால் சட்டப்பூர்வாக செயல்படுத்தப்பட்டது.  இதன் மூலம் தனி நபரோ அல்லது நிறுவனங்களோ குறிப்பிடப்பட்ட ஸ்டேட் வங்கி கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரை பத்திரமாக வாங்கி, பெயர் குறிப்பிடாமல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். மேலும், 15 நாட்களுக்குள் கட்சிகள் அவற்றைப் பணமாக மாற்றாவிட்டால், அது பிரதமர் நிவாரண நிதிக்குச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் 3 தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் சார்பில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், தேர்தல் பத்திர திட்டம் அடிப்படை அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறியதோடு, அத்திடத்தையும் ரத்து செய்தது. மேலும், வரும் மார்ச் 6ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி தன்னிடம் உள்ள தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும், அந்த தகவல்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை முழுமையாக எடுக்கக் கால தாமதம் ஆகும் என்பதால் தகவல்களை அளிக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும் எனக்கூறி SBI சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறி தன்னார்வலர்கள் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டேட் வங்கி சார்பில், பத்திரங்கள் வாங்கியவர்களின் பெயர்கள் இல்லை, அது ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பதால், அந்த தகவல்களை சேகரிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், 39 வங்கி கிளைகளிலிருந்து பத்திரங்கள் வாங்கப்பட்டிருந்தாலும், அனைத்து தகவல்களும் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியது. மேலும், தேர்தல் நிதி வாங்கியது 24 கட்சிகள் என்பதும் அவற்றின் தகவல்களை உடனடியாக எடுக்க முடியவில்லை என்பதும் ஏற்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியது. தீர்ப்பு வழங்கிய 26 நாட்களாக SBI என்ன செய்து கொண்டிருந்தது எனவும் நீதிபதிகள் கடுமையாக கேட்டனர்.

தொடர்ந்து SBI-ன் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், நாளை (12.03.2024) பணி நேரத்திற்குள் SBI தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாளைக்குள் தகவல்களை அளிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என்றும் SBI-க்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow