"தேர்தல் நேரத்தில் மட்டும் பிரதமரின் பாசம்.." முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்...
தேர்தல் நேரங்களில் மட்டும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது பாசம் பொங்குவது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தருமபுரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததுடன், 8 ஆயிரத்து 736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்ணினத்துக்கு கலைஞர் கருணாநிதி வழங்கிய மாபெரும் அதிகாரக்கொடை தான் சொத்துரிமை எனவும் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற சட்டத்தை இயற்றியது அவர்தான் எனவும் பெருமிதம் தெரிவித்தார். விடியல் பயணத்திட்டத்தின்கீழ் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிப்பதாகவும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடி பேர், நான் முதல்வன் திட்டத்தில் 28லட்சம் இளைஞர்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 16 லட்சம் குழந்தைகள், மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.15கோடி பெண்கள் பயனடைவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவால் இதுபோன்று திட்டங்களை பட்டியலிட முடியுமா? எனக் கேள்வி எழுப்பிய முதலமைச்சர், ஒகேனக்கல் திட்டத்தை முடக்கியதே அதிமுக ஆட்சியின் சாதனை என விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 10 ஆண்டுகளாக எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500வரை உயர்த்திவிட்டு, தேர்தல் வரும் நேரத்தில் ரூ.100 குறைப்பது அப்பட்டமான அநியாயம் எனவும் சாடினார். தமிழ்நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வெறும் கையால் முழம் போடுவதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது ஏன் பாசம் பொங்குகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?