power bank: பவர் பேங்கினால் பதறும் விமான நிறுவனங்கள்... பயணிகளுக்கு வந்தாச்சு புது ரூல்ஸ்!

வருகிற ஏப்ரல் 1 முதல், பவர் பேங்க் எனப்படும் போர்டபிள் சார்ஜர்களை விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் பயன்படுத்த தடை விதித்துள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். 

Mar 23, 2025 - 15:46
Mar 23, 2025 - 16:10
power bank: பவர் பேங்கினால் பதறும் விமான நிறுவனங்கள்... பயணிகளுக்கு வந்தாச்சு புது ரூல்ஸ்!
பவர் பேங்கினால் பதறும் விமான நிறுவனங்கள்

மொபைலின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், பலரும் தங்கள் பயணத்தின் போது பவர் பேங்கினை உடன் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், விமானத்தில் பயணிப்பவர்கள் பவர் பேங்கினை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், வருகிற ஏப்ரல் 1 முதல்,விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் பவர் பேங்க் பயன்படுத்த தடை விதித்துள்ளது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். அதற்கான காரணம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

லித்தியம் பேட்டரிகள் என வகைப்படுத்தப்பட்ட பவர் பேங்குகளை விமானத்திற்குள் கொண்டுச் செல்லவும், அதனை பயன்படுத்தவும் International Air Transport Association (IATA) முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சில குறிப்பிட்ட விமானங்களில் பயணிகள் 100 Wh வரை திறன் கொண்ட பவர் பேங்குகளை யாருடைய ஒப்புதலும் இல்லாமல் கொண்டு செல்லலாம். அதே நேரத்தில் 100 Wh முதல் 160 Wh வரை உள்ள பவர் பேங்குகளுக்கு சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்களின் ஒப்புதல் தேவை. 160 Wh-க்கு மேல் உள்ள பவர் பேங்குகள் விமானங்களில் அனுமதிக்கப்படாது.

ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானத்தில் நிகழ்ந்த விபத்து:

சில தினங்களுக்கு முன்னர் ஹாங்சோவிலிருந்து ஹாங்காங்கிற்குச் சென்று கொண்டிருந்த ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானத்தில், லக்கேஜ் பெட்டியிலிருந்த ஒரு பவர் பேங்க் தீப்பிடித்ததால், அவசரமாக ஃபுஜோவில் விமானம் தரையிறக்கப்பட்டது. பற்றி எரிந்த தீயை பயணிகளும், விமானப் பணிப்பெண்களும் தண்ணீர் மற்றும் பழச்சாறினை கொண்டு போராடி அணைத்தனர். விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கப்பட்டது.

தைவான் விமான நிறுவனமான EVA ஏர், விமான பயணத்தின் போது பவர் பேங்க்கினைப் பயன்படுத்துவதையும், அதனை சார்ஜ் செய்வதையும் தடை செய்துள்ளது. பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தங்கள் மொபைலினை முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. தாய் ஏர்வேஸ், மார்ச் 15 முதல் தனது விமானங்களில் பவர் பேங்க் பயன்படுத்துவதைத் தடை செய்வதாக அறிவித்தது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தாய் ஏர்வேஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவர் பேங்கினால் ஏற்பட்ட விபத்துகளுள் சில:

ஜனவரி 2025: ஏர் பூசன் (Air Busan) விமானம் கிளம்புவதற்கு தயாராக இருந்த நிலையில் தீடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு பவர் பேங்க் தான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 2025: பட்டிக் ஏர் விமானம் (Batik air plane) தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், பவர் பேங்க் தீப்பற்றி புகை வெளிவந்ததால் பயணிகளிடையே அச்சம் தொற்றியது.

ஜனவரி 2023: தைபேயில் இருந்து சிங்கப்பூர் சென்ற ஸ்கூட் (Scoot) விமானத்தில் பவர் பேங்க் தீப்பிடித்தது. விமானம் தரையில் இருந்தபோது அது அதிக வெப்பமடைந்ததாக ஸ்கூட் நிறுவனம் சார்பில் காரணம் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து சம்பவத்தில் இரண்டு பயணிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow