5 பேர் உயிரிழப்பு - அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவு?
உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு மாநில உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. வானத்தில் போர் விமானங்கள் நிகழ்ச்சியை காண சென்னை, திருச்சி, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழக காவல்துறை சார்பில் 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மேலும் அரசு சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், மருத்துவ முகாம், நடமாடும் கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் பொதுமக்களுக்காக செய்யப்பட்டது. இருப்பினும் கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் மேலும் பல்வேறு மருத்துவ காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என தமிழக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பல்வேறு மருத்துவ காரணங்கள் மற்றும் கூட்ட நெரிசல் மற்றும் கடும் வெயில் காரணமாக உயிரிழந்தனர். இதுகுறித்து உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?