மெரினா சம்பவம்: உதயநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்- தமிழக பாஜக 

உங்களின் நிர்வாகத் திறனின்மையை ஒப்புக்கொண்டு நீங்கள் பதவி விலகவேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்

Oct 7, 2024 - 16:06
மெரினா சம்பவம்: உதயநிதி பொது மன்னிப்பு கேட்க வேண்டும்- தமிழக பாஜக 

கார் ரேஸிற்கு காட்டிய அக்கறையில், கால்வாசியையாவது சென்னை மெரினா விமானப்படையின் சாகச நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிலும் காட்டியிருக்கலாமே என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக எக்ஸ் தளப்பக்கத்தில், கார் ரேஸிற்கு காட்டிய அக்கறையில், கால்வாசியையாவது IAF-இன் சாகச நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிலும் காட்டியிருக்கலாமே தமிழக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் அவர்களே, உங்களின் சுய லாபத்திற்காகவும், வீண் பெருமைக்காகவும் நீங்கள் நடத்திய கார் ரேஸின் ஏற்பாட்டு பணிகளை கால் கடுக்க நேரில் சென்று சரிபார்த்த நீங்கள், நமது பாரதத்தின் பெருமையைப் பறைசாற்றும் “இந்திய விமான சாகச நிகழ்ச்சி”-க்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதராமல் 5 உயிர்களைப் பலி கொடுத்தது நியாயமா?

விமான சாகச நிகழ்விற்கு 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக துணைத் தளபதி பிரேம்குமார் பல நாட்களுக்கு முன்னமே கூறிவிட்ட நிலையில், கூட்டத்தை சமாளிக்க எவ்வித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்யாதது ஏன்? சாமானிய மக்களின் உயிர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதானா?

கார் ரேஸிற்கு புது ரோடு போடத் தெரிந்த உங்களுக்கு, லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் உண்டாகும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தெரியவில்லையா? ஒழுங்கற்ற கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பட்ட துன்பங்களுக்கு யார் பொறுப்பு?

போதிய அரசு பேருந்துகள் மற்றும் இதர போக்குவரத்து வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள் போன்றவைகளின்றி, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கூட்டத்தில் சிக்கி தத்தளித்ததற்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்?

வெயிலின் தாக்கம் தாளாமல் பொதுமக்கள் குடிநீருக்கு அலைமோதிக் கொண்டிருக்கையில், நீங்களும் உங்கள் குடும்பமும் சகல வசதிகளுடன் சௌகரியமாக உட்கார்ந்து நிகழ்வைக் கண்டு ரசித்தீர்களே, உங்களுக்கெல்லாம் சமூகநீதி பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?

வாரிசு என்ற அடிப்படையில் தமிழகத்தின் துணை முதல்வராக நீங்கள் பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் 5 உயிர்களை நாம் இழந்துள்ளோமே, உங்கள் நிர்வாகத் தோல்விக்கு இதுவே கண்கூடான சாட்சியல்லவா?

எனவே, இச்சம்பவத்தில் பலியான உயிர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் 200 பேரின் ஆரோக்கியத்திற்கும் முழுப் பொறுப்பேற்று, தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்துதராமல் மக்களை அலைக்கழித்ததற்கு தமிழக மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், உங்களின் நிர்வாகத் திறனின்மையை ஒப்புக்கொண்டு நீங்கள் பதவி விலகவேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்” என பதிவிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow