கடலில் மூழ்கி பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் பலி...நாகர்கோவிலில் சோகம்..
4 பேரும் மாயமான நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கின.
நாகர்கோவில் அருகே லெமூர் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் திருச்சி SRM மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ளனர்.
இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 6 பேரும் நேற்று (மே-5) நாகர்கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து இன்று காலை திற்பரப்பு அருவிக்கு சென்ற அவர்கள், தண்ணீர் குறைவாக கொட்டியதால் அங்கிருந்து ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு சென்றனர். அப்போது கடலில் விளையாடிக் கொண்டிருந்த 6 பேரையும் ராட்சத அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள், விரைந்து சென்று சர்வதர்ஷித் மற்றும் நேசி ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரவீன் ஷாம், வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி ஆகிய 4 பேரும் மாயமான நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கின.
அதேநேரம், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சர்வதர்ஷித்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் அளித்தனர். சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?