மதிமுகவுக்கு பம்பர சின்னம்...தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு…

பம்பர சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை - தேர்தல் ஆணையம்.

Mar 26, 2024 - 17:46
மதிமுகவுக்கு பம்பர சின்னம்...தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு…

மதிமுகவிற்கு பம்பர சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில் நாளை காலை 9 மணிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

மக்களவைத் தேர்தலில்  திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பர சின்னம் ஒதுக்க கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 26) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது,  வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவுபெறும் நிலையில் தங்களது கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என வைகோ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சி, 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனவும் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தது.. தொடர்ந்து பம்பர சின்னம் பொது சின்ன பட்டியலில் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டனர். 


இதையடுத்து பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு மீண்டும் விசாரணக்கு வந்தபோது, பம்பர சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை எனவும் மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை (மார்ச் 27) முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டுள்ள விண்ணப்பத்தின் மீது நாளை (மார்ச் 27) காலை 9 மணிக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நாளை பிற்பகலுக்கு தள்ளிவைத்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow