சாதி வெறி தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை.. +2வில் சாதனை.. கல்வி செலவை ஏற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை + 2 பொதுத் தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவர் சின்னத்துரையின் மேற்படிப்பிற்கான கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

May 6, 2024 - 14:27
May 6, 2024 - 15:22
சாதி வெறி தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை.. +2வில் சாதனை.. கல்வி செலவை ஏற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முனியாண்டி அம்பிகாபதி தம்பதிகளின் மகன் சின்னதுரை. நாங்குநேரி அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.  பள்ளி மாணவர்களுக்கிடையே சாதிய ரீதியான மோதல் போக்கு ஏற்படவே, ஒரு வாரம் பள்ளிக்கு செல்லாமல் அவர் இருந்துள்ளார்.  

இதை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற சின்னதுரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்திய போது பள்ளி மாணவர்கள் சிலர் தன்னை சாதி ரீதியாக தாக்குவதாக அவர் கூறியுள்ளார். குறிப்பிட்ட மாணவர்களின் விவரங்களையும் அவர் ஆசிரியர்களிடம் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள்,  சின்னதுரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக  வெட்டினர்.  வீடு வாசல் முழுவதும் ரத்தமானது. 

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மாணவர்களிடையேயான சாதி வெறி குறித்து ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. சாதி வெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, காலாண்டு தேர்வு நடைபெற்றது. மருத்துவமனையில் இருந்தவாரே காலாண்டு தேர்வினை எழுதினார். 

முழுமையான உடல்நலம் பெறாததால் உதவியாளர் மூலமாக மாணவர் +2 பொதுத்தேர்வை எழுதியிருந்தார். இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர் சின்னதுரை பிளஸ் 2 தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே சின்னத்துரையின் மேற்படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். சின்னத்துரையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. பி.காம் படிக்கப்போவதாக சின்னத்துரை கூறியுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow