77-வது குடியரசு தினம்: ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார் 

நாட்டின் 77-வது குடியரசு தினவிழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

77-வது குடியரசு தினம்: ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார் 
R.N. Ravi hoists the national flag

77-வது குடியரசு தின விழாவிற்காக  உழைப்பாளர் சிலை பகுதியில் பிரமாண்டமான அளவில் பந்தல்கள் போடப்பட்டுள்ளன. அங்கு சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் வருகை தந்து இருந்தனர்.

காலை 7.55 மணிக்கு விழாப் பகுதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவர், காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே வந்த முதல்வர் தலைமைச்செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்.

இதன் பின்னர், தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை (கிழக்கு) கமாண்டர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் ஒழுங்கு) ஆகியோரை ஆளுநருக்கு சம்பிரதாயப்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு அங்கிருக்கும் கம்பத்தில் தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். அப்போது அந்தப் பகுதியின் மேல் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவப்பட்டது. அந்த நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 5-வது முறையாக ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

பின்னர் ராணுவ படைப்பிரிவு, கடற்படைப் பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசிசை பிரிவு, வான்படை பிரிவினர் அணிவகுத்து வந்து கவர்னருக்கு வணக்கம் செலுத்தினர். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவு, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப்படை, கடலோர பாதுகாப்புக்குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் மற்றும் பெண்கள்) உள்பட 30 படைப்பிரிவினர் அணிவகுத்து சென்றனர்.

அதன்பின்னர் அணி வகுப்பு மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கினார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த போலீஸ் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதல்வர் வழங்கினார். பின்னர், பதக்கம் பெற்றோர் குழுவாக முதல்வரின் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசில் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வந்தன. அதற்கு முன்னதாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow