உல்லாசத்திற்கு வந்த இளைஞர்: தாக்கி பணம் பறித்த ரவுடி கும்பல் அரெஸ்ட்
கிரைண்டர் ஆப் மூலம் உல்லாசத்திற்கு அழைத்த பெண்ணை தேடி சென்ற இளைஞரை தாக்கி பணம் பறித்த ரவுடிகும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தங்கி உள்ளார். நண்பர்களுடன் வசித்து வருகிறார். அந்த இளைஞர் நேற்று 23 ஆம் தேதி Grindr செயலி மூலம் பெண் ஒருவரை தேடி வந்ததாக தெரிகிறது. உல்லாசத்திற்காக பெண் ஒருவரை தேடிய போது ஒரு பெண்ணின் எண் கிடைத்தது. அதில் பேசிய அந்த இளைஞர், தி.நகர் புது தெருவில் உள்ள வீட்டிற்கு வரும்படி பெண் கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பி அந்த இளைஞரும் தி.நகர் வீட்டிற்கு சென்றார். ஆனால் அந்த வீட்டில் பெண் இல்லை. அங்கு 5 பேர் இருந்துள்ளனர். அந்த இளைஞரை தரைத்தளத்தில் காலியாக இருந்த வீட்டிற்குள் அழைத்து சென்று இளைஞரை தாக்கி தங்க நகைகள், செல்போனை பறித்தனர். பிறகு இரும்பு ராடால் தாக்கி வங்கிக் கணக்கில் உள்ள 12,000 ரூபாய் பணத்தை அனுப்பச் சொல்லி மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த இளைஞர் வேண்டுமென்றே ஜிபே மூலம் பணத்தை அனுப்பாமல் தவறான PIN நம்பரை போட்டு லாக் செய்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் அந்த கும்பல் இளைஞரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேர் கும்பல் அந்த இளைஞரை போன் மூலம் பேச வைத்து நண்பரை ஒரு இடத்திற்கு வரவைத்து ஏடிஎம் கார்டை பறித்தனர். ஏடிஎம் மையத்திற்கு அழைத்து சென்று பணத்தை திருட முயன்ற போது அதனுடைய PIN நம்பரையும் தவறாக போட்டு பணம் எடுக்க முடியாத வகையில் பிளாக் ஆனதால் அந்த கும்பலுக்கு இன்னும் ஆத்திரம் அடைந்தனர்.
அந்த இளைஞரை பைக்கில் வைத்து அழைத்து செல்லும் போது தெருவில் நின்ற பைக்கை மிதித்து கீழே தள்ளி விட்டார். இதனை கண்டு அந்த தெரு மக்கள் கூடியதால் கடத்தல் கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாம்பலம் போலீசார் வந்து விசாரித்த போது தான் பின்னணி விவரங்கள் தெரிய வந்தது.
காயமடைந்து இருந்த இளைஞரை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது அந்த கும்பலில் இருந்தது தி.நகரைச் சேர்ந்த ரவுடி சரவணன் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவர் ஏற்கனவே விபத்தில் காயமடைந்து மாவுகட்டு போட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய பிறகு கூட்டாளிகளான தி.நகரைச் சேர்ந்த சுதாகர், சரண்ராஜ், 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். கைதான சுதாகர், ரவுடி சரவணனின் உறவினர் என்பது தெரிய வந்தது. கைதானவர்களிடம் இருந்து பணம், தங்க மோதிரங்கள், 2 செல்போன்கள் ஆகியற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதே பாணியில் எத்தனை பேரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு 17 வயது சிறுவன் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?

