மயிலாப்பூரில் ரூ.1.5 கோடி வழிப்பறி செய்த சம்பவம்.. பதுங்கியிருந்த 9 பேரை பொறி வைத்து பிடித்த தனிப்படை..
சென்னை, மயிலாப்பூரில் ஒன்றரை கோடி ரூபாயை வழிப்பறி செய்து திருத்தணி, அரக்கோணத்தில் பதுங்கியிருந்த ஒன்பது பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. தனியார் கல்லூரி நிர்வாகியான இவர் கடந்த 2ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் மயிலாப்பூர் சாய்பாபா கோயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஒன்றரை கோடி ரூபாயை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தனியார் கல்லூரி நிர்வாகி ராஜாவிடம் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் பேரில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆனால் பணத்தை இழந்த ராஜா முதலில் வாய்மொழியாக ஒன்றரை கோடி வழிப்பறி செய்யப்பட்டதாக தெரிவித்திருந்த நிலையில், எழுத்து பூர்வமான புகாரில் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தையே மர்ம நபர்கள் வழிப்பறி செய்ததாக குறிப்பிட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ராஜாவின் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருத்தணி மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பதுங்கியிருந்த வழிப்பறி கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வியாசர்பாடியை சேர்ந்த திலீப், இம்ரான், விக்ரம், சுனில் குமார், யோகேஷ், தினேஷ் குமார், நவீன், அசோக் குமார், உலகநாதன் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 41 லட்சம் ரூபாய் ரொக்கம், நகை மற்றும் 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?