எடப்பாடி அருகே வீடு புகுந்து திருடியவர் கைது
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீடு புகுந்து திருடிய திருடனை பூலாம்பட்டி காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பக்கநாடு கிராமத்தில் குண்டு மலைக்காடு எனும் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (எ) குஞ்சுப்பையன் (47) இவர் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் தாயார் சித்தாயி ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பழனியப்பன் பக்கத்து ஊரில் நடந்த கபடிப் போட்டியைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி மகேஸ்வரி மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலுக்கு அவரது உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார். வீட்டில் இருந்த பழனியப்பனின் தயார் சித்தாயி பழனியப்பனின் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்திற்குச் சென்றுவிட்டார்.
இதன் பிறகு வீட்டிற்குத் திரும்ப வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பது கண்டு பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பீரோவை சோதனை செய்த போது பீரோவில் இருந்த 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்ததும் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்களது வீட்டில் நடைபெற்ற இந்தத் திருட்டு குறித்து பூலாம்பட்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிக்கவே பூலாம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்தனர். திருடனைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் இன்று பழனியப்பன் வீட்டின் அருகே வசித்து வந்த சீரங்கன் என்பவரது மகன் முருகன்(21) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் நகை மற்றும் பணத்தைத் திருடியதை ஒப்பு கொண்டார். அவரைக் கைது செய்த காவல் துறையினர் அவர் திருடிச் சென்ற 1.5 லட்ச ரூபாய் பணத்தையும், 2 பவுன் நகையையும் மீட்டு பழனியப்பனிடம் ஒப்படைத்தனர். பின்னர் திருடிய முருகனை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?