வடிந்தது வெள்ளை அறிக்கைனா.. தேங்கியது குற்ற அறிக்கையா? – தமிழிசை சாடல்!
தமிழகத்தில் பெய்த மழைநீர் வடிந்தது வெள்ளை அறிக்கை என்றால் பிறகு தேங்கியது குற்ற அறிக்கையா என தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கக்கன் நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் மருத்துவ முகாம் நடத்தி உணவு வழங்கும் விழா நடந்தது. இதில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து உணவுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “தமிழக அரசுக்கு நன்றி சொல்வதை விட வருநபகவானுக்கு நன்றியை சொல்கிறேன். உதயசூரியனுக்கு நன்றியை சொல்வதை விட சூரியனுக்கு நன்றியை சொல்கிறேன்” என சிரித்தபடியே பேட்டி அளித்தார். ,
தொடர்ந்து பேசிய அவர், “சில இடங்களில் கழிவுநீர் உடன் மழைநீர் கலந்து ஓடியதாக மாமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள். தொலைநோக்கு திட்டம் என்று என்ன கொண்டு வந்தார்கள்? மழைக்கு பயந்து கார்களை மேம்பாலம் மீது நிறுத்தும் மக்களுக்கு என்ன தீர்வு கொண்டு வந்துள்ளனர்? தண்ணீர் வடிந்தது வெள்ளை அறிக்கை என்றால், தண்ணீர் தேங்கி இருந்தது என்ன குற்ற அறிக்கையா?” என தமிழிசை கேள்வி எழுப்பினார்.
மேலும், “ஏன் இதுவரை முழுமையாக மழைநீர் கால்வாய் கட்டி முடிக்கப்படவில்லை. பிரதான சாலையில் மற்றும் தான் மழைநீர் வடிந்தது. உட்பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது முழுமையாக வடியவில்லை. மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை காணவில்லை என போஸ்டர் அடிக்க கூடிய நிலை உருவாகியுள்ளது. விளம்பரம் காண்பித்து கொண்டிருக்கின்றன.
அரசியல் ரீதியாக வெள்ளத்தை அணுகுகிறார்கள். அறிவியல் ரீதியாக வெள்ளத்தை அணுகவில்லை. நேற்று நடந்தது உதயநிதிக்கு விளம்பரம் மட்டுமே” என்று தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
What's Your Reaction?