விறுவிறுப்படையும் போதைப் பொருள் வழக்கு.. ஜாபர் சாதிக்கிடம் குரல் பதிவு சோதனை..
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் குரல் மாதிரி சோதனைக்காக அவரது குரலை பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கடந்த மாதம் 9ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஜெய்பூரில் கைது செய்தனர். இதையடுத்து ஜாபர் சாதிக் உட்பட அவருக்கு உடந்தையாக செயல்பட்ட 4 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய சுமார் 35 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக் உட்பட கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வு செய்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பல்வேறு நபர்களிடம் ஜாபர் சாதிக் பேசிய ஆடியோ பதிவுகளை கைப்பற்றி உள்ளதாகவும், அது தொடர்பாக விசாரணைக்காக ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரிகள் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் பிறகு அதனை உறுதி செய்யப்பட்ட பின்பு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் டெல்லி நீதிமன்றத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் முறையிட்டப்பட்டது.
நீதிமன்ற அனுமதி கிடைத்ததை அடுத்து, திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது குரலை பதிவு செய்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
What's Your Reaction?