அதிமுக சார்பில் தமிழ்மகன் உசேன் கையொப்பமிட உத்தரவிடக் கோரி, தேர்தல் ஆணையத்தில் மனு...
தேர்தல் ஆவணங்களில் அதிமுக சார்பில் தமிழ்மகன் உசேன் கையொப்பமிட உத்தரவிடக் கோரி, தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் ஆவணங்களில் அதிமுக சார்பில் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு பதிலாக, அவைத்தலைவர் டாக்டர். தமிழ்மகன் உசேன் கையொப்பமிட உத்தரவு பிறப்பிக்கக் கோரி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களான வழக்கறிஞர் பா. ராம்குமார் ஆதித்தன், கே.சி. சுரேன் பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
கடந்த 2022-ல் நடந்த பொதுக்குழுவில், அதிமுக கட்சி விதிகளுக்கு முரணாக திருத்தம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளதாகவும், அதனை மறைத்து, தேர்தல் ஆணையத்தில் கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி பல மனுக்கள் அளித்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், தேர்தல் படிவங்களில் கையொப்பமிட தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழு தேர்வு செய்ததை அங்கீகரித்து, திருத்தப்பட்ட கட்சி விதிகளை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா. ராம்குமார் ஆதித்தன், கே. சி.சுரேன் பழனிச்சாமி தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது என்பதை மறைத்து பொய்யான உறுதிமொழியை எடப்பாடி பழனிச்சாமி அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு பதிலாக அதிமுக கட்சியின் தேர்தல் படிவத்தில் கையெழுத்திட, கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் அளித்தது. இதனை ஏற்று இரட்டை இலை சின்னத்தை அதிமுக கட்சியின் வேட்பாளர்க்கு வழங்க தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருத்தம் செய்யப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தாக்கல் செய்தார். தொடர்ந்து, தேர்தல் ஆணையம் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதாகவும், எடப்பாடி கே பழனிச்சாமியை பொதுச் செயலாளராக அங்கீகரிப்பதாகவும், ஆனால், அது நீதிமன்ற உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டது என்றும் அறிவித்தது. இதையடுத்து, பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது, செல்லாது என்றும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் பா. ராம்குமார் ஆதித்தன், கே. சி.சுரேன் பழனிச்சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் சம்பந்தமான ஆவணங்களில் அதிமுக கட்சி சார்பில், எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலாக, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையொப்பமிட உத்தரவு பிறப்பிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பா. ராம்குமார் ஆதித்தன், கே. சி.சுரேன் பழனிச்சாமி ஆகியோர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
What's Your Reaction?