’விக்சித் பாரத்’-ஐ உடனே ஸ்டாப் பண்ணுங்க... தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தேர்தல் நேரத்தில் திட்ட செய்திகளை மக்களுக்கு அனுப்பக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. அது ஒரு வகையான பிரசாரமாக கருதப்படும்.
பாஜக அரசு சார்பில் விக்சித் பாரத் திட்டத்தின் கீழ், பல்வேறு செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வாட்ஸ்-அப் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக நிறுத்த தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
2047ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளை கடந்துவிடும், அந்த காலத்திற்குள், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற பாஜக அரசின் சார்பில் விக்சித் பாரத் என்ற தொலைநோக்குத் திட்டம் கடந்தாண்டு பிரதமர் மோடியால் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ் பல முன்னேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் தகவல்களை மக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில், வாட்ஸ்-அப் மூலம் செய்திகளாக தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது.
அதன் தொடக்கமாக, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதம், வாட்ஸ்-அப் மூலம் நூறு கோடிக்கும் அதிகமானோருக்கு அனுப்பபட்டது. அத்துடன் சில திட்டங்கள் குறித்த தகவல்களும் அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதன் காரணமாக, இத்தகைய திட்ட செய்திகளை மக்களுக்கு அனுப்பக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. அது ஒரு வகையான பிரசாரமாக கருதப்படும். எனினும், தற்போதும் நாட்டு மக்களுக்கு விக்சித் பாரத் செய்திகள் வந்த வண்ணம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, அந்த செய்திகள் அனுப்புவதை உடனடியாக நிறுத்த பாஜக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
What's Your Reaction?