சிவன் சக்தியோடு ஐக்கியமான ஆடி மாதம்.. வேப்ப மரம் பூமியில் உருவான புராண கதை தெரியுமா?
மதுரை: தமிழ் மாதங்களில் நான்காவது மாதம் ஆடி மாதம். சூரியன் நான்காவது ராசியான கடக ராசியில் பயணம் செய்யும் மாதம். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் பண்டிகைகள் களைகட்டும். ஆடி அமாவாசை தொடங்கி ஆடி பூரம், ஆடி பெருக்கு, ஆடி தபசு என ஆடி மாதத்தில் திருவிழாக்கள் களை கட்டும். அம்மன் கோவில்களில் வேப்ப இலைகள் தோராணங்கள் நிறைந்திருக்கும்.ஆடி என்பது எப்படி வந்தது என்று புராண கதை ஒன்று சொல்கிறார்கள்.
ஆடி மாதம் புராண கதை: சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்ற போது ஒரு கசப்பான சுவையை உணர்ந்தார் சிவபெருமான்.
தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க நினைத்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.
அவள் உடனே சிவபெருமானை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.
அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார். ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை.
ஆடி மாதம் பிறந்ததும் தட்சிணாயனம் ஆரம்பமாகிறது. உயிர்களைக் காக்கும் சூரியன் தன் பயணத் திசையை இம்மாதத்திலிருந்து தெற்கு திசை நோக்கி மாற்றிக் கொள்கிறார். ஆடி முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவு நேரமாகும். இந்த மாதத்தில்தான் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆடி மாதத்தில் புதிதாக திருமணமான தம்பதியினரை பிறந்த வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பார்கள். முதல் ஆடி நடு ஆடி கடைசி ஆடி என மூன்று ஆடிக்கும் விருந்து களை கட்டும். இன்னும் சில நாட்களில் ஆடி மாதம் பிறக்கப்போகிறது. ஆடி மாதத்தை அம்மன் கோவில்களுக்கு சென்று உற்சாகமாக கொண்டாடுங்கள்.
What's Your Reaction?